- by Editor
- 1 year ago
புத்தாக்க ஆராய்ச்சிகளுக்கு அரசின் முழுமையான ஆதரவு - பிரதமர் உறுதி
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
புத்தாக்க ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், நிதியுதவி மற்றும் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தனியார் துறை ஆகியவற்றுக்கு இடையிலான இணைப்புகளை வலுப்படுத்த அரசாங்கம் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து இன்று (05) பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
புதிய தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்பங்களை வர்த்தகமயமாக்கும் நோக்கில் பல்கலைக்கழகங்களும் அரச நிறுவனங்களும் இணைந்து தொழில்நுட்ப உதவி மையங்களை (Technology Incubation Centres) இயக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கை புத்தாக்க உற்பத்தியாளர்களின் ஆணைக்குழு (SLIC) ஊடாக தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம், யாழ்ப்பாணம், ரஜரட்ட மற்றும் ருஹுண பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப உதவி மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மூலம் முன்மாதிரி (Prototype) உருவாக்கம், உற்பத்தித் திட்டமிடல், வணிக அபிவிருத்தி மற்றும் அறிவுசார் சொத்து முகாமைத்துவம் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் விதாதா (Vidatha) வேலைத்திட்டத்தின் கீழ் இயங்கும் University Linked Incubation Centres மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு தொழில்நுட்ப உதவி, தரப் பரிசோதனை, பயிற்சி மற்றும் வணிக ஆலோசனைச் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.
தற்போது வவுனியா, ருஹுண மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களில் இந்த மையங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதுடன், எதிர்காலத்தில் ஊவா வெல்லஸ்ஸ, ரஜரட்ட மற்றும் களனிப் பல்கலைக்கழகங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
புதிய புத்தாக்க உற்பத்தியாளர்களுக்கு ஆரம்பக்கட்ட நிதியுதவி வழங்கும் வகையில் தேசிய புத்தாக்க முகவர் அமைப்பின் (NIA) Innovation Voucher Scheme, Seed Funding மற்றும் Venture Capital உள்ளிட்ட முதலீட்டு வாய்ப்புகள் ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, SLIC நிறுவனத்தின் Innovative Biz கடன் திட்டத்தின் மூலம் குறைந்த வட்டியில் நிதி வழங்கப்படுவதுடன், தொடக்க நிறுவனங்களுக்கு (Startups) ஒரு மில்லியன் ரூபாய் வரை ஆரம்ப மூலதனம் வழங்கும் திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த தேசிய ஆராய்ச்சி சபை (NRC) மற்றும் தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) இணைந்து ஏற்றுமதி மேம்பாடு மற்றும் இறக்குமதி மாற்றீட்டு ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் பிரதமர் கூறினார்.
இந்திய அரசின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் திணைக்களத்துடன் இணைந்து 16 ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் 22 பட்டறைகளுக்கான ஒப்பந்தங்கள் கடந்த ஜூலை மாதம் கையெழுத்திடப்பட்டுள்ளதுடன், தொழில்நுட்பப் பரிமாற்றத்தை வலுப்படுத்த தேசிய தொழில்நுட்பப் பரிமாற்ற தளமும் (National Technology Transfer Platform) உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், புத்தாக்க உற்பத்தியாளர்களின் அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாக்க உலக அறிவுசார் சொத்து அமைப்பின் (WIPO) வழிகாட்டுதலுக்கு அமைய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க ஆதரவு மையங்கள் நாட்டின் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 25 பல்கலைக்கழகங்களில் நிறுவப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.