Thursday, October 8, 2026

புதுச்சேரியில் மாயமான சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்பு: பொதுமக்கள் வீதி மறியல்


புதுச்சேரியில் மாயமான 9 வயது சிறுமி, வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் வீதி மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த தம்பதியரின் இரண்டாவது மகளுக்கு 9 வயது. அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே கடந்த 2 ஆம் திகதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார்.

மாயமான சிறுமியை பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து முத்தியால்பேட்டை பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தார். பொலிஸார் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தீவிரமாகத் தேடினர்.

எனினும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. சிறுமியை விரைந்து மீடக்கக் கோரி குடும்பத்தினரும், உறவினர்களும் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே நேற்று முன்தினம் வீதி மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நேற்று சோலை நகர் பகுதியில் அம்பேத்கர் வீதி - கண்ணதாசன் வீதி இடையே செல்லும் கழிவுநீர் கால்வாயில் சாக்கு மூட்டை மிதப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து முத்தியால்பேட்டை பொலிஸார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு வேட்டி துணியால் சுற்றி கால்வாயில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. சிறுமியின் தந்தையும் கால்வாயில் மிதப்பது தனது மகள்தான் என்பதை உறுதி செய்தார்.

கால்வாயில் இருந்து சிறுமியின் உடல் கிடைத்ததையடுத்து, அப்பகுதியில் பொதுமக்கள் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். சிறுமியின் உடலை எடுத்துச் சென்ற பொலிஸார் , உடலை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால் பொதுமக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து பொலிஸார் சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுமி கொலை செய்து கால்வாயில் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் பொலிஸார் 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

you may also like