Saturday, October 10, 2026

புதிய பெயருடன் களம் இறங்கும் ஜஃப்னா கிங்ஸ்


லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த அணியான ஜஃப்னா கிங்ஸ், புதிய உரிமையாளர்களின் கட்டுப்பாட்டிற்கு மாறியுள்ளது.

இதன் மூலம், அணி இனி "Anchor Jaffna Kings" என்ற பெயரில் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சஹீர் கான் மற்றும் தொழிலதிபர் நாகேந்திர சித்தௌதம் ஆகியோரை இணை உரிமையாளர்களாகக் கொண்ட, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள Anchor Sports AB நிறுவனம், ஜஃப்னா கிங்ஸ் அணியை அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றியுள்ளது.

கடந்த ஜூலை 23ஆம் தேதி முன்னாள் உரிமையாளர்களுடனான ஒப்பந்தம் நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் மற்றும் LPL தொடரின் உரிமையை வைத்துள்ள Innovation Production Group ஆகியவற்றின் தற்காலிக நிர்வாகத்தின் கீழ் அணி செயல்பட்டு வந்தது. தற்போது புதிய நிரந்தர உரிமையாளர்களின் கீழ் அணி மீண்டும் இயங்கவுள்ளது.

Anchor Sports AB நிறுவனம் ஏற்கனவே பெல்ஜியத்தின் European T20 Premier League தொடரில் Antwerp Anchors அணியையும், கனடாவின் Super60 லீக்கில் Vancouver Anchors ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளையும் நிர்வகித்து வருகிறது. தற்போது ஜஃப்னா கிங்ஸும் அந்த சர்வதேச விளையாட்டு வலையமைப்பில் இணைந்துள்ளது.

ஜஃப்னா கிங்ஸின் முன்னாள் உரிமையாளரான Sports Commune நிறுவனத்தின் இணை உரிமையாளரும், முன்னாள் இந்திய 19 வயதுக்குட்பட்ட அணியின் வீரருமான மன்ஜோத் கல்ரா, ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதை அடுத்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதேவேளை, நிறுவனத்தின் மற்றொரு இணை உரிமையாளரான மயங்க் கோயல் இதுவரை தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

களத்திற்கு வெளியே பல்வேறு சவால்களை எதிர்கொண்டபோதிலும், LPL வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாக விளங்கும் ஜஃப்னா கிங்ஸ், ஐந்து தொடர்களில் நான்கு முறை சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. நடப்பு தொடரிலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

புதிய இணை உரிமையாளரான நாகேந்திர சித்தௌதம், இலங்கையின் கிரிக்கெட் பாரம்பரியத்தை மதிப்பதாகவும், ஜஃப்னா அணியில் மேற்கொள்ளப்படும் முதலீட்டின் மூலம் LPL தொடரின் எதிர்கால வளர்ச்சிக்கு பங்களிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மற்றொரு இணை உரிமையாளரான சஹீர் கான், இலங்கையில் உருவாகும் வேகப்பந்து வீச்சாளர்களின் திறமையை எப்போதும் உயர்வாக மதிப்பதாகவும், உரிமையாளராக இலங்கை கிரிக்கெட்டுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த LPL போட்டிப் பணிப்பாளர் சமந்த தொடங்கொட, சஹீர் கான் போன்ற அனுபவம் மிக்க கிரிக்கெட் நிபுணரின் வருகை LPL தொடருக்கு பெரும் பலமாக அமையும் என்றும், அவரது அனுபவமும் வழிகாட்டலும் இலங்கை இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

you may also like