- by Editor
- 2 years ago
பாலிவுட் ஜாம்பவான் நானா படேகர் மாரடைப்பால் திடீர் மரணம்
-
- by Editor,
- 1 day ago
- in சினிமா செய்திகள்
பிரபல பாலிவுட் மற்றும் மராத்தி திரைப்பட நடிகர் நானா படேகர் இன்று (08) தனது 75ஆவது வயதில் காலமானார். கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவாவின் டோனா பவுலா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் நானா படேகர் மயங்கிய நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவரை மணிப்பால் வைத்தியசாலைக்கு அவசரமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு வைத்தியர்கள் சுமார் 45 நிமிடங்கள் தொடர்ந்து CPR சிகிச்சை அளித்து அவரை மீட்க முயற்சித்த போதிலும், சிகிச்சை பலனளிக்கவில்லை. பின்னர் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், மரணத்திற்கான துல்லியமான காரணத்தை உறுதிப்படுத்த பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நானா படேகரின் மறைவு இந்திய திரையுலகிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அவர், ‘கிராந்திவீர்’, ‘பரிந்தா’, ‘சலாம் பாம்பே!’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் பரவலாக அறியப்பட்டவர். மூன்று தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ள அவர், பத்மஸ்ரீ விருதாலும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நானா படேகர் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.