- by Editor
- 3 months ago
இரகசியம் - பரகசியம் (05.09.2024)
மாகாண சபைகள் தேர்தல் சட்டம் நேற்று முன்தினம் மூன்றாம் திகதி நாடாளுமன்றத்துக்கு வர இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் முடிவை இலங்கைத் தமிழரசுக் கட்சி அவசரப்பட்டு எடுத்து, மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை அங்கீகரிக்கும் வாய்ப்பைக் குழப்பி விட்டது, ரணில் காலை வாரிவிட்டார் என்றெல்லாம் குறிப்பிடப்படுவது குறித்து மேலதிக விசாரணைகளை - தேடல்களை - முடுக்கி விட்டேன்.
கடந்த முதலாம் திகதி தமிழரசின் மத்திய குழுக் கூட்டத்தில் இது குறித்து கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்.பி யும் முன்னாள் பொதுச் செயலாளருமான துரைராஜசிங்கம் சுட்டிக்காட்டி இருக்கின்றார். அதையும் மீறி இந்த முடிவை - சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தை - தமிழரசு அன்று ஏன் எடுத்தது என்பதைத் தேடினேன்.
தமிழரசு கட்சி இந்தத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவை தெளிவாக அறிவிக்கும் வரை இந்த மாகாண சபை தேர்தல் சட்டத்தை மூன்றாவது வாசிப்புக்கு - நாடாளுமன்றுக்கு - எடுக்க வேண்டாம் என்று பிரதமர் மட்டத்திலிருந்து நாடாளுமன்ற விவகார ஒழுங்குபடுத்தல் தரப்புக்கு திட்டவட்டமான உத்தரவு வந்திருந்ததை நாடாளுமன்ற அதிகாரிகள் மட்டத்தில் இப்போது உறுதிப்படுத்தி அறிய முடிகிறது.
கடந்த முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை தமிழரசு மத்திய குழுக் கூட்டத்தில் இந்த ஜனாதிபதி தேர்தலில் கட்சி யாரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுக்காமல் விட்டால் அல்லது தீர்மானம் எடுப்பது ஒத்திவைக்கப்பட்டிருந்தால், இந்த மாகாணசபைகள் தேர்தல் சட்டத்தை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் தள்ளிப் போடும் ஒழுங்கே நிகழ்ந்திருக்கும் என அந்த வட்டாரங்கள் நேற்று அடித்துக் கூறின.
ஏற்கனவே இந்த மாகாண சபை தேர்தல் சட்டம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன கடுமையான சீற்றத்தில் இருந்தார் எனக் கூறப்படுகிறது. முன்னைய நாடாளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் அவர் தலைமையில் ஒரு தெரிவுக்குழு அமைக்கப்பட்டு இந்த மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளுக்குரிய விடயங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அப்படி இருக்க, அதே விடயத்தை தனிநபர் பிரேரணை என்று சுமந்திரன் முன்வைத்து அந்தத் தேர்தலை மீளவும் நடத்தக் கோருவதற்குத் தேவையான சட்டமூலத்தை கொண்டு வந்தார் என்ற பெயரை சுமந்திரன் தட்டிச் செல்வதில் இந்தியப் பிரதமருக்கு உடன்பாடு இல்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை, சுமந்திரனின் கட்சி எடுத்தால் மட்டுமே இந்தச்சட்ட மூலம் தொடர்பான மூன்றாவது வாசிப்புக்கு அனுமதிப்பது, இல்லையேல் அதற்கு இடம் அளிப்பது இல்லை என்று பிரதமர் உறுதியாக இருந்திருக்கின்றார். ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை தமிழரசு எடுக்காதவரை, எவ்வளவு காலம் சென்றாலும் ரணிலின் அரசின் கீழ் இந்த மாகாண சபை தேர்தல் சட்டத்தை மீளக் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு அடியோடு இல்லை என்பதுதான் உண்மை நிலைமை. அப்படிப் பார்த்தால் கடந்த ஞாயிறன்று இலங்கை தமிழரசு எடுத்த முடிவு அவசர குடுக்கைத்தனம் இல்லை என்றே கூற வேண்டும்.
***
பொது வேட்பாளர் விடயதில் அத்தரப்பின் காட்டில் நல்ல மழை. வெள்ளம் போடும் நிலைமை. வாக்கு மழையல்ல. வாக்குத் திரட்டும் முயற்சிக்கான நிதி திரட்டலில்தான் நல்ல மழை.
ஏற்கனவே முதல் கட்டமாக 80 லட்சம் ரூபா வரை வந்தது எனக் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அதிலும் விட மூன்று மடங்கான தொகையிலும் கூடுதலாக மேலும் 10 லட்சமும் சேர்த்து, உலகத் தமிழர்கள் நன்கறிந்த தமிழ் வர்த்தக புள்ளி ஓரிரு தினங்களுக்கு முன்னர் வாரி வழங்கியிருக்கின்றார்.
ஆஸியில் ஓர் ஒளிபரப்பு நிறுவனம் தான் சேகரித்த பத்து லட்சம் ரூபாவை வழங்கி இருக்கின்றது. சேகரிப்பு 4 'C'ஐத் தாண்டி இருப்பதால் பல பொக்கட்டுகளில் நல்ல மழை என்றும் பேச்சு அடிபடுகின்றது.
கிட்டும் நிதி உதவிக்கு ஏற்ப வாக்குகளும் கிட்டினால் திருப்திதான்.....!
***
தமிழரசு ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தைச் சந்தித்து, பிரதேச ரீதியாக தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நேரடியாக - முற்கூட்டியே - விளங்கப்படுத்தும் கூட்டம் ஒன்று முதல் கட்டமாக நேற்று காலை 8 மணிக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
சுமந்திரன், சாணக்கியன் எம்.பிக்களுடன் சென்று வன்னி நிலைமை குறித்து முன்னாள் எம்.பியான திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா நேரில் சஜித்திடம் விளக்கினார். வெடுக்குநாறிமலை, குருந்தூர்மலை, மகாவலி 'எல்' வலயம் போன்ற பிரச்சினைகள் குறித்துப் பேசப்பட்டு சில தீர்க்கமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன எனத் தெரிகின்றது.
இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட எம்.பி. குகதாசன் மற்றும் கலையரசன் எம்.பி. போன்றோர் இந்தக் கூட்டத்தில் மிஸ்ஸிங்.
அரசியலில் தமக்கு நெருக்கடி வரும் சமயங்களில் எல்லாம் குகதாசன் எம்.பி. ஒரு தந்திரம் வைத்திருக்கின்றார். சுகவீனம் என்று போய்ப் படுத்துக் கொள்வதுதான் அது. சஜித் பிரேமதாஸவை போய் சந்திப்பதை சிறிதரன் எம்.பி. தரப்பு விரும்புமோ, என்னவோ என்று கருதிப் போலும் குகதாசன் எம்.பி. தமக்கு சுகவீனம் எனக் குறிப்பிட்டு, கட்டிலில் சுருங்கிக் கொண்டு விட்டார்.
நேற்று முன்தினம் மாலை வரை நாடாளுமன்றத்தில் மிக ஆரோக்கியத்துடன் காணப்பட்ட அவருக்கு நேற்றுக் காலை சஜித்தை சந்திக்க இருக்கையில் திடீர்ச் சுகவீனம் வந்துவிட்டது. இப்போது எல்லாம் பிரச்சினைக்கு உரிய விடயங்கள் வரும்போது குகதானுக்கு சுகவீனமும் வந்து விடுகின்றது.
வயது போய் தளர்ந்த சம்பந்தன் போல இப்போது அவரது இடத்துக்கு, பிரச்சினை என்றதும் சீக்காளியாகி நோயில் படுத்து விடும் பிரதிநிதி வந்திருக்கின்றார் போலும். அவருக்கு இன்னொரு ஐந்து ஆண்டுகள் எம்.பி. பதவி வழங்குவது சம்பந்தனுக்குக் கடைசி காலத்தில் எம்.பி. பதவியை வழங்கியதற்கு ஒப்பாக போகும் என்றுதான் படுகிறது.
அரசியலில் அடிக்கடி சுகவீனம் என்கிறவர்கள் அரசியலைத் தொடர்ந்து அடுத்து வருபவருக்கு வழி விடுவது தான் நல்லது முறை.
இது குதாசனுக்கும் பொருந்தும், அவரது கட்சியின் தலைவருக்கும் கூட பொருந்தும்தான்....!