Tuesday, October 13, 2026

பா.ஜ.க. அவதூறுகளைப் பரப்பி தி.மு.கவை வீழ்த்திவிட முடியாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி


"அவதூறுகளைப் பரப்புவதில் பா.ஜ.கவும், அ.தி.மு.கவும் சளைத்தவையல்ல. பா.ஜ.க. எத்தகைய நாடகத்தை நடத்தினாலும் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த முடியாது."

- தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பாவின் ஸ்பெயின் நாட்டில் இருக்கிறேன். அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்பதே, கருணாநிதி வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களில் முதலானது. அதனை முன்னெடுத்து, அயாராது உழைத்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுமைக்கான வெற்றி வியூகத்தை வகுக்க வேண்டிய பொறுப்பு நிறைந்த இடத்தில் தி.மு.க. இருக்கிறது.

பாசிச பா.ஜ.க. ஆட்சியின் சர்வாதிகார போக்குக்கு முடிவு கட்ட வேண்டிய உறுதியுடன் உள்ளோம். மாநில உரிமைகளை கட்டிக்காக்க தேர்தலின் வெற்றி மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்துஇ தேர்தல் பணிகளை தி.மு.க. முன்கூட்டியே முன்னெடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்காக, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு, தேர்தல் அறிக்கைகுழு, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு என 3 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவை பணிகளை உடனடியாக தொடங்கிவிட்டன. இதில், டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையிலான குழுவினர் காங்கிரஸுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தைகளை முடித்து, மற்ற தோழமை கட்சிகளுடன் ஆலோசனையில் உள்ளனர்.

தமிழகத்தில் பா.ஜ.க. பூஜ்யம்தான். பா.ஜ.க. எத்தகைய நாடகத்தை நடத்தினாலும் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த முடியாது. திராவிட மாதிரி ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்கள். மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பதை நினைவு படுத்துங்கள். கடந்த முறை மிச்சம் வைத்த ஒற்றைத் தொகுதியையும் சேர்த்து நாற்பதுக்கு நாற்பது என்ற முழு வெற்றியை உறுதி செய்யுங்கள்.

நம்மைத் திசைதிருப்ப அவதூறுகளைப் பரப்புவதில் பா.ஜ.கவும், அ.தி.மு.கவும் சளைத்தவையல்ல. தி.மு.கவை மிரட்டிப் பார்க்கும் வகையிலான ஊடகப் பரப்புரை இருக்கும். எதற்கும் தி.மு.க. அஞ்சாது என்பதை களப்பணிகள் மூலம் புரியவைப்போம். பா.ஜ.க. அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் கூட தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளன.

முழுமையான வரவு செலவுத் திட்டம் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இண்டியா கூட்டணி அரசு தாக்கல் செய்யும். மாநிலங்களின் நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும்."- என்றார்.

you may also like