Saturday, October 10, 2026

பாகிஸ்தான் திரும்பினார் நவாஸ் ஷெரீப்: நாட்டை மீட்டெடுப்பேன் என்று சபதம்



பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று பாகிஸ்தானுக்கு திரும்பினார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீதான ஊழல் வழக்கில், அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து லாகூரில் உள்ள கோட்லாக்பாத் சிறையில் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், நவாஸ் ஷெரீப்புக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் மாரடைப்பு எனக் கருதி சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பிய நவாஸ் ஷெரீப், கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி லாகூரில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சி இருந்ததால், தொடர்ந்து அவர் லண்டனிலேயே தங்கி இருந்தார். இந்த நிலையில், பாகிஸ்தானில் எதிர்வரும் ஜனவரியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அவர் நேற்று இஸ்லாமாபாத் திரும்பினார்.

முன்னதாக, லண்டனில் இருந்து டுபாய் சென்ற அவர், அங்கு சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு தற்போது சொந்த நாடு திரும்பி உள்ளார். இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூருக்கு விமானத்தில் சென்ற அவர் பின்னர் அங்கிருந்து தனது வீடு திரும்ப உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு லாகூரில் பிரம்மாண்ட வரவேற்புக்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

நவாஸ் ஷெரீப்பின் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ள கட்சியின் மூத்த தலைவர் க்வாஜா முகம்மது ஆசிப், இது கொண்டாட்டத்துக்கான தருணம். நவாஸ் ஷெரீப்பின் வருகை பாகிஸ்தானின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும். மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டினை வளர்ச்சிப் பாதைக்கு மீட்டெடுப்பேன் என நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் காரணமாக பாகிஸ்தான் நாட்டில் உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து சார்ந்த கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று லாகூரில் நடைபெற்ற பேரணியின்போது கருத்து தெரிவித்த நவாஸ் ஷெரீப், மக்களே எனது ஆட்சி காலத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருளின் இருந்த விலையை இன்றைய விளையாடும் ஒப்பிட்டுப் பாருங்கள். இதற்காக தான் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேனா? நீங்களே சொல்லுங்கள்? நாட்டினை வளர்ச்சிப் பாதைக்கு மீட்டெடுப்பேன்.

எங்களது 1990 பொருளாதார திட்டத்தை ஏற்றிருந்தால் நாட்டில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கும். வறுமை என்ற பேச்சுக்கே இடம் இருந்திருக்காது. ஆனால், இன்றைய நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. நான் பல ஆண்டுகளுக்கு பின்னர் உங்களை சந்திக்கிறேன். இருந்தாலும் அந்த அன்பில் இமியளவும் மாற்றமில்லை. உங்கள் அன்பை உங்களது கண்களின் வழியே நான் பார்க்கிறேன். எனது வலிகள் அனைத்தையும் மறக்கிறேன். ஆனாலும் அந்த காயத்தின் வடு அப்படியே என்னுள் உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது அம்மா, அப்பா மற்றும் மனைவிக்கு இறுதி அஞ்சலி கூட செலுத்த முடியாத சூழலுக்கு ஆளானேன்.

பாகிஸ்தானை கட்டமைத்தவர்கள் நாம். அணு ஆயுத வல்லமை சக்தியாக உருவாக்கியது நாம். மக்களுக்கு தேவையான மின்சாரத்தை மலிவான விலையில் அளித்தோம். பாகிஸ்தானுக்கு எதிராக எந்த செயலையும் நான் செய்தது கிடையாது. அணு ஆயுத சோதனையின் போது 1990-களில் அமெரிக்க இடையூறை தீரத்துடன் எதிர்கொண்டேன். எனது இடத்தில் யாரேனும் இருந்திருந்தால் அதை செய்திருக்க முடியுமா என்று தெரிவித்துள்ளார்.

you may also like