Saturday, October 10, 2026

நெல் கொள்வனவிற்கு கடன் திட்டம் அறிமுகம்



ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, சிறு மற்றும் மத்திய தர அரிசி ஆலை உரிமையாளர்கள், நெற் களஞ்சியசாலை உரிமையாளர்கள், தொகை நெல் சேகரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்திக்கும் வகையில் இம்முறை பெரும்போகத்தின் போது நெல் கொள்வனவு செய்வதற்காக 'மடபன' கடன் திட்டத்தை செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பொதுமக்கள் அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் இதனைத் தெரிவித்தார்.

மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றினால் இந்தக் கடன் வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறு மற்றும் மத்திய தர அரிசி உற்பத்தி தொழில்துறையினர் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தரார்.

இந்த கடன் திட்டத்தின் கீழ், 09 பில்லியன் ரூபா கடன் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக 50 மில்லியன் ரூபாவும், நெற் களஞ்சியசாலை உரிமையாளர்களுக்களுக்கும் தொகை நெல் சேகரிப்பாளர்களுக்கும் அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபா வரையிலும் கடனாக வழங்கப்படும்.

கடன் திருப்பிச் செலுத்த 180 நாள்கள் கால அவகாசம் வழங்கப்படும். 15 வீத வருட வட்டி விகிதத்தில் 4 வீதம் திரைசேறியினால் அந்தந்த வங்கிகளுக்கு வழங்கப்படும். அதன்படி, கடன் பெறுநர்கள் 11 வீதம் மட்டுமே வருட வட்டி செலுத்த வேண்டும்.

விவசாசியகளுக்கு நல்ல விலையைப் பெற்றுக்கொடுப்பதோடு, மக்களுக்கும் நியாயமான விலையில் அரிசியை பெற்றுக்கொடுப்பதே இக்கடன் திட்டத்தின் நோக்கமாகும் எனவும் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் விவசாய அமைச்சும் மற்றும் ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் அகில இலங்கை அரிசி ஆலை தொழில்துறையினர் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் வங்கி, இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

you may also like