Sunday, October 11, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி பல்லேகல சிறைச்சாலைக்கு இடமாற்றம்


நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதலின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரி, பல்லேகல சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஜூலை 6ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தின் போது, கைதிகள் சிறைச்சாலையின் இறுதி மரக் கதவையும் உடைத்து வெளியேற முயன்றதாகவும், அந்தச் சந்தர்ப்பத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளில், கைதிகள் குழுவொன்று சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அதிகாரிகளின் உயிரைப் பாதுகாப்பதற்கும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், இந்தத் துப்பாக்கிச் சூடு சிறைச்சாலை சட்டவிதிகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டதா அல்லது அதிகார வரம்பை மீறிய செயற்பாடா என்பதை உறுதிப்படுத்துவதற்காக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற இந்த வன்முறை மோதலில் இதுவரை 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

you may also like