- by Editor
- 4 months ago
நாட்டின் சட்ட கட்டமைப்புகள் நவீனமயமாக்கப்பட வேண்டும்: ஜனாதிபதி தெரிவிப்பு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
"நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு சட்ட கட்டமைப்பும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும்."
- இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கண்டி மகாவலி ரீச் ஹோட்டலில் நடைபெற்ற கண்டி சட்டத்தரணிகளுடனான சிநேகபூர்வ சந்திப்பில் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
"சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை தொடர வேண்டுமா அல்லது அதை மாற்றியமைப்பதா என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும். சம்மதித்து விட்டு ஒவ்வொரு முறையும் முடிவை மாற்றிக் கொள்ளும் அவப்பெயர் இலங்கைக்கு உண்டு.
இதுவே நாட்டுக்காக எமக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பாகும். எனவே, இந்த நன்மையை மக்களுக்கு வழங்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை சட்டப்பூர்வமாக்க எதிர்பார்க்கிறோம். நாட்டின் மீதான பொறுப்பில் இருந்து நாம் யாரும் தப்ப முடியாது. எனவே, அதனால் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
நமது வர்த்தக நடைமுறைகளில் பெரிய மாற்றங்கள் இருக்க வேண்டும். பல சட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். அத்துடன் உலகம் ஏற்றுக்கொண்ட பல நவீன சட்டங்கள் இன்னும் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உலகில் நாம் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், அந்த சட்ட கட்டமைப்பில் நாமும் இடம் பெற வேண்டும்.
பொருளாதார பரிவர்த்தனைத் திட்டத்தில் டிஜிட்டல் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தியுள்ளோம். டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவது டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான அனைத்து சட்டங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
மேலும் புதிய சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் காலநிலை மாற்ற சட்டங்களை கொண்டு வருவும் எதிர்பார்க்கிறோம். மேலும், நாங்கள் புதிய நிதிச் சட்டங்களையும் வர்த்தகச் சட்டங்களையும் உருவாக்குகிறோம். புதிய வங்கிச் சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கையின் மூலம், அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டில் புதிய சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்படும். அது இலங்கையை நீண்டகால அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டமாக அமையும் என்பது எனது நம்பிக்கையாகும்.
புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தும் அதே வேளையில், ஏற்கனவே உள்ள சட்டங்களையும் திருத்த வேண்டும். இத்திட்டத்திற்கு பொருத்தமான நாடாக இலங்கை வெற்றிபெற, அதற்குரிய சட்டக் கட்டமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். நம் நாட்டில் முதலீட்டாளர்களைத் தக்கவைக்க முடியாததற்கு ஒரு காரணம், சட்ட நடவடிக்கைகளில் உள்ள தாமதமாகும். " - என்றார்.