Thursday, October 8, 2026

தென்னாபிரிக்கா வெற்றி ; வெளியேறியது ஆப்கானிஸ்தான்!


தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்ற ஆப்கானிஸ்தான் அணி, உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியது.

13ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

மீதமுள்ள ஓர் அரையிறுதி இடத்துக்கு நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. இதில் அரையிறுதிக்கு முன்னேற நியூஸிலாந்துக்கு அதிக வாய்ப்பு இருந்தது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி, தனது முக்கிய ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியை நேற்று எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் முதலில் ஆப்கானிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடியது.

தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய குர்பாஸ், இப்ராஹிம் இருவரும் முறையே 25 ஓட்டங்கள் மற்றும் 15 ஓட்டங்களைச் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த ரஹ்மத் ஷா மற்றும் நூர் அஹமது ஆகியோர் தலா 26 ஓட்டங்கள் சேர்த்தனர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஒமர்சாய் 97 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் 244 ஓட்டங்களைச் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் 245 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்கா களமிறங்கியது.

தொடக்க வீரரர்களாகக் களமிறங்கிய குயின்டன் டி கொக் 41 ஓட்டங்களையும்; டெம்பா பவுமா 23 ஓட்டங்களையும்; சேர்த்து ஆட்டமிழந்தனர்.

47.3 ஓவர்கள் முடிவில் தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ஓட்டங்களைச் சேர்த்து இலக்கைப் கடந்தது.

இதையடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென்னாபிரிக்கா வெற்றிபெற்றது.

தென்னாபிரிக்காவின் ரசி வான்டர் டுசன் 76 ஓட்டங்களுடனும் பெலக்வாயோ 39 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.

ஆட்டநாயகனாக தென்னாபிரிக்காவின் ரசி வான்டர் டுசன் தெரிவானார்.

you may also like