Saturday, October 3, 2026

திருச்சி - யாழ்ப்பாணம் விமான சேவை மீண்டும் தொடக்கம்


திருச்சி விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஏற்கனவே விமான சேவைகள் இடம்பெற்று வரும் நிலையில், யாழ்ப்பாணத்திற்கான நேரடி விமான சேவையும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும், தொழில்நுட்ப காரணங்களால் பின்னர் அந்த சேவை இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இண்டிகோ விமான நிறுவனம் சார்பில் திருச்சி–யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை நேற்று (01) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானம் சுமார் 45 முதல் 50 நிமிடங்களில் யாழ்ப்பாணத்தை சென்றடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான சேவை வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் என மூன்று நாட்கள் இயக்கப்படவுள்ளது.

முதல் நாள் சேவையாக நேற்று யாழ்ப்பாணத்திலிருந்து திருச்சி சென்ற விமானத்தில் 45 பயணிகளும், திருச்சியிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற விமானத்தில் 44 பயணிகளும் பயணித்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் திருச்சி–யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை இரு பகுதிகளையும் சேர்ந்த பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

you may also like