- by Editor
- 6 days ago
திபெத்தில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 16 பேர் உயிரிழப்பு
-
- by Editor,
- 6 days ago
- in உலக செய்திகள்
திபெத் பகுதியில் நேற்று (22) மாலை 7.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் வடக்கு திபெத்தின் நாக்சு (Nagqu) நகரில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாக்சு நகரில் குறைந்தது 339 வீடுகள் இடிந்து விழுந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காயமடைந்தவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதுடன், ஏனைய 21 பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக நகர ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு உதவும் வகையில், பொலிஸார் மற்றும் தீயணைப்புப் படையினரை உள்ளடக்கிய மீட்புக் குழுவினர் தற்காலிக கூடாரங்களை அமைத்து வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவென சீனாவின் தேசிய ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி தெரிவித்துள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, உள்ளூர் நேரப்படி இரவு 10.33 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் மையப்புள்ளி, நாக்சு நகருக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 191 கிலோமீற்றர் தொலைவில், மக்கள் நடமாட்டம் குறைந்த உயரமான வடக்கு திபெத் பகுதியில் அமைந்திருந்தது. நிலநடுக்கம் சுமார் 18 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா, சீன நிலநடுக்க வலைப்பின்னல் மையத்தை மேற்கோள் காட்டி, நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
நாக்சு நகரம், திபெத்தின் தலைநகரான லாசாவிலிருந்து வடக்கே 300 கிலோமீற்றருக்கும் அதிகமான தொலைவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.