Sunday, October 11, 2026

த.வெ.க. ஆட்சி: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,500 – விஜய் வாக்குறுதி


தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்தவுடன் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2500 ரூபா வழங்கப்படும், பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம், அனைத்துப் பஸ்களிலும் பெண்களுக்கு இலவசப் பயணம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படவுள்ளன என த.வெ.க. தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்துள்ளார்.

சென்னையில் த.வெ.க. சார்பில் கொண்டாடப்பட்ட மகளிர் தின விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்ட வாக்குறுதிகள் விவரம்:

பெண்கள், குழந்தைகள், முதியோர் நலனில் அக்கறை செலுத்துவதே தவெகவின் அடிப்படை முக்கிய நிலைப்பாடு. அதன்படி அதற்கென தனி இலாகா ஏற்படுத்தப்படும். அந்த இலாகா எனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும்.

தமிழகத்தை இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் என தம்பட்டம் அடிக்கும் தி.மு.க. அரசு, மகளிர் உரிமைத் தொகையாக வெறும் ஆயிரம் ரூபா மட்டும் வழங்குகிறது. எனவே, த.வெ.க. அரசில் 60 வயது வரை உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 2,500 ரூபா வழங்கப்படும். இதில் மாநில, ஒன்றிய அரசின் ஊழியர்களாக இருக்கும் குடும்பங்களுக்கு மட்டும் விதிவிலக்கு.

‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்துக்கும் வருடத்துக்கு 6 காஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படவுள்ளன. இது தாய்மார்கள் வயிற்றில் பால் வார்க்கும் திட்டமாக இருக்கும்.

அண்ணன் சீர் திட்டம் மூலம், பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம், தரமான பட்டு சேலையும் அளிக்கப்படும்.

காமராஜர் கல்வி உறுதி திட்டத்தின் கீழ், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை இடைநிற்றலே இல்லாமல் குழந்தைகள் கல்வி கற்க, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு 15 ஆயிரம் இந்திய ரூபா பொருளாதார உதவி வழங்கப்படும்.

இப்போது 'பிங்க்' நிற பஸ்களில் மட்டும் பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் உள்ளது. த.வெ.க. அரசு அமைந்தால் வெற்றிப் பயணம் திட்டத்தின் படி, அரசுப் போக்குவரத்து கழகத்தின் அனைத்துப் பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ராணி வேலுநாச்சியார் படை அமைக்கப்படும். சாதாரண உடையில் 500 படைகள் மாநிலம் முழுவதும் கண்காணிப்பில் இருப்பார்கள்.

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரித்து விரைவாக நீதி வழங்க அஞ்சலையம்மாள் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எச்சரிக்கை பொத்தான்கள் அமைக்கப்படும்.

சி.சி.டி.வி. கமராக்கள் இல்லாத இடமே இல்லை என்ற வகையில் 'ஷீரோ டார்க் ஸ்பாட்டுகள்' அமைக்கப்படும்.

பொதுவிநியோக கடைகள், பாடசாலைகள், கல்லூரிகள் விலையில்லா 'சானிடரி நப்கின்கள்' வழங்கப்படும்.

சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் நிலுவையிலுள்ள கடன்களை திரும்ப செலுத்துவதன் மூலமும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 5 லட்சம் ரூபா வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இவர்கள் தொழில் தொடங்கினால் 5 லட்சம் இந்திய ரூபா 100 ரூபா மானியத்தில் வழங்கப்படும்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், குழந்தைகளுக்கான வரவேற்பு 'கிட்' வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை விஜய் வெளியிட்டார்.

you may also like