Saturday, October 10, 2026

தமிழ்க் காங்கிரஸ் கட்சியுடன் ஜனநாயகத் தமிழரசு கூட்டு!


ஜனநாயகத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்துள்ளன எனவும், இந்தப் புதிய கூட்டு சைக்கிள் சின்னத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது எனவும் ஜனநாயகத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் கருணாகரன் நாவலன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

இந்த இணைவு என்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் ஏற்பட்டுள்ளது எனவும், மக்களின் எதிர்கால நோக்கத்தின் அடிப்படையிலான காலத்தின் கட்டாயமாக இந்த இணைவு காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது நாவலன் மேலும் தெரிவிக்கையில்,

"தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் இன்று பல கட்சிகள் இணைந்துள்ளன. அதன் ஓர் அங்கமாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வழிநடத்தலில் ஜனநாயகத் தமிழரசுக் கட்சி இந்தக் கூட்டணியில் இணைந்து எமது தமிழ் மக்களின் தீர்வுக்காகவும், மக்களின் அடிப்படைத் தேவை மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முகமாகவும் செயற்படவுள்ளது.

இந்த நோக்கத்துக்காக ஏனைய கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கின்றோம்.

சிங்களப் பேரினவாதத்தின் ஒற்றர்களால் தமிழினத்தின் அரசியல் கேள்விக்குறியாக உள்ளது. இந்த விடயத்தை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கூட்டணியில் ஜனநாயகத் தமிழரசுக் கட்சியுடன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் தென்மராட்சியின் அருந்தவபாலன் தரப்பும் இணைந்துள்ள அதேவேளை மேலும் சில தமிழ்த் தேசிய அமைப்புக்கள் இந்தக் கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கின்றோம்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்களுக்குப் பழக்கப்பட்ட சின்னம் என்பதன் அடிப்படையிலும் மக்களுக்குக் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடாது என்ற காரணத்தின் அடிப்படையிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பெயர் மற்றும் சின்னத்தில் போட்டியிடவுள்ளோம்." - என்றார். 

you may also like