Friday, October 9, 2026

தமிழர் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்குங்கள்: ஆஸி. தூதுவரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை


ஆட்சி மாற்றத்தின் பின்னும் இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்று வரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து, ஆஸ்திரேலிய அரசின் தீர்மானங்களும், இராஜதந்திர அழுத்தங்களும் ஈழத்தமிழர் நலன் சார்ந்து வலுப் பெற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்டீபன்ஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவருடன் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், அரசாங்க மாற்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் முதல் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வரையிலான தற்போதைய தமிழ் அரசியல் குறித்து தூதுவரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு தொடர்பான காணிப் பிரச்சினைகள், வடக்கு மாகாணத்தில் சுமார் 6000 ஏக்கர் காணிகளை அரசு காணிகளாக அறிவிக்கும் சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவிப்பு, தமிழ் பேசும் மக்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கில் காணி, பொலிஸ் மற்றும் நிதி ஆகியவற்றில் மீளமுடியாத அதிகாரங்களைக் கொண்ட சமஷ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், மேற்படி விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கு அழுத்தம் வழங்குமாறும் ஆஸ்திரேலியத் தூதுவரிடம் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில் ஆஸ்திரேலியத் தூதுவருடன் அவரது துணைவியார் கிரிட்டினா ஸ்டீபன்ஸ், திட்ட ஒத்துழைப்புக்கான முதல் செயலாளர் திருமதி ஜோ கிட், அரசியல்துறைக்கான இரண்டாவது செயலாளர் மேத்யூ லார்ட் மற்றும் மூத்த ஆராய்ச்சி அதிகாரி சில்வெஸ்டர் வொர்திங்டன் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

you may also like