Tuesday, October 6, 2026

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல்: 1,400 இற்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்


எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கு போட்டியிடும் நோக்கில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தனித்து போட்டியிடும் சுயேச்சைகள் என சுமார் 1,400 இற்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இது குறித்த தகவல் தேர்தல் ஆணையத்தின் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் திகதி தொடங்கியது. ஆரம்ப நாள்களில் மனு தாக்கல் மந்தமாக இருந்தது. சில சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் வேட்பாளர்கள் சிலர் தங்களது தனித்துவ செயலால் கவனம் ஈர்த்தனர்.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதால் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, தே.மு.தி.க உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால், வேட்பாளர்கள், கட்சியினர் வருகையால் தேர்தல் அலுவலகங்கள் களைகட்டின. 39 தொகுதிகளிலும் மனுதாக்கல் விறுவிறுப்பாக நடந்தது.

தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி, வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் அதிக அளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் 1,400 இற்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள புதுச்சேரி தொகுதியில் சுமார் 45 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செய்யும் பணி இன்று நடைபெறுகிறது.


you may also like