Sunday, October 11, 2026

டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உடனடியாக பதவி விலக வேண்டும்: பா.ஜ.க. வலியுறுத்தல்


பிணை நிபந்தனைகளை சுட்டிக்காட்டி டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உடனடியாக பதவி விலக வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா,

“டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கி உள்ளது. அந்த நிபந்தனைகள் மூலம் கேஜ்ரிவால் தான் யார் என்பதை அறிந்து கொள்வதற்காக அவருக்கு கண்ணாடி காட்டப்பட்டுள்ளது.

சிறைவாசியாக இருந்த முதல்வர் கேஜ்ரிவால் இனி பிணை பெற்றவராக இருப்பார். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், டில்லி மக்களின் குரலுக்கு மதிப்பளித்து அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், அவருக்கு துளி கூட தார்மிகம் இல்லாததால் அதை அவர் செய்ய மாட்டார். ஒரு அரசியல்வாதி ஒரு குற்றச்சாட்டு வந்தாலும் பதவி விலக வேண்டும்.

ஆனால், 6 மாதங்கள் சிறையில் இருந்தபோதும், அவர் இராஜினாமா செய்யவில்லை. இப்போது அவர் குற்றம் சாட்டப்பட்டவர்.

தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என்பது நீதிமன்றத்தில் கேஜ்ரிவாலின் வாதமாக இருந்தது. ஆனால், கேஜ்ரிவாலின் கைது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரத்தை உச்ச நீதிமன்றம் முறியடித்துள்ளது. வழக்கில் இருந்து கேஜ்ரிவால் விடுவிக்கப்படவில்லை. விசாரணை தொடரும் என்பதால் விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லை.

உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனைகளின்படி, அரவிந்த் கேஜ்ரிவாலின் பாஸ்போர்ட் உச்ச நீதிமன்றத்திடம் இருக்கும். அவரால் வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியாது. வாரத்திற்கு இரண்டு முறை திங்கள் மற்றும் வியாழன் தோறும் விசாரணை அதிகாரி முன் அரவிந்த் கேஜ்ரிவால் ஆஜராக வேண்டும். சாட்சியிடம் பேச முடியாது.

அரவிந்த் கேஜ்ரிவால் ஏன் இராஜினாமா செய்யவில்லை என்பதற்கு ஆம் ஆத்மி கட்சி பதில் சொல்ல வேண்டும். ஊழல்வாதி அரவிந்த் கேஜ்ரிவால் என்றாவது ஒரு நாள் தலைகுனிவார். அவரிடமிருந்து இராஜினாமாவை மக்கள் வாங்குவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

you may also like