- by Editor
- 2 years ago
செம்மணிப் புதைகுழியில் பொம்மை ஒன்றும் மீட்பு!
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது குழந்தைகளின் விளையாட்டுப் பொம்மை ஒன்றும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 'யுனிசெவ்' சர்வதேச தொண்டு நிறுவனத்தின் பாடசாலைப் புத்தகப் பையோடு அடையாளம் காணப்பட்ட சிறிய பிள்ளையினுடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மனித என்புத் தொகுதிக்குக் கீழேயே இந்தப் பொம்மை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் ஆறாம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
இதன்போது, 'யுனிசெவ்' சர்வதேச தொண்டு நிறுவனத்தின் பாடசாலைப் புத்தகப் பையோடு அடையாளம் காணப்பட்ட சிறிய பிள்ளையினுடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மனித என்புத் தொகுதி முழுவதுமாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த என்புத் தொகுதிக்குக் கீழே குழந்தைகளின் சிறிய விளையாட்டுப் பொம்மை ஒன்றும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்றுமுன்தினம் அடையாளம் காணப்பட்ட காலணி நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அந்தக் காலணி 'பாட்டா' நிறுவனத்தின் பெயர் பொறித்த காலணியாகும். பெண்களின் காலணியை ஒத்தாக அது காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.
நேற்று மேலும் சில மனித என்புத் தொகுதி எச்சங்களும் அடையாளம் காணப்படுள்ளன. இவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த நிலையில் காணப்படுவதால் எண்ணிக்கையைக் கணிப்பிடுவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது. அவற்றை முழுமையாக அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி ஞா.ரனித்தா, சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின்போது முன்னிலையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.