- by Editor
- 6 days ago
இரகசியம் - பரகசியம் (01.07.2024)
நேற்றிரவு நம்மை விட்டுப் பிரிந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் அவரது திருகோணமலை மண்ணில் நடைபெற இருக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவராகவும் விளங்கிய இரா.சம்பந்தன் இறக்கும் போதும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர். ஆகையினால் அவரது பூதவுடல் நாடாளுமன்றத்திற்கு எடுத்துவரப்பட்டு, அங்கு வைத்து அஞ்சலியும் மரியாதையும் செய்யப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அதற்கான ஒழுங்குகள் நடைபெறுகின்றன என்றும் தெரிகின்றது.
நாளையும் நாளை மறுதினமும் நாடாளுமன்றம் விசேட விவாதத்திற்காகக் கூடுகின்றது. வழமையாக நாடாளுமன்ற அமர்வு நாள்களில் அரசியல் தலைவர்களின் பூதவுடலை எடுத்து வந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நாடாளுமன்றத்தில் நடைபெறுவதில்லை.
அவசரம் - அவசியம் - என்றால் நாடாளுமன்ற அமர்வு தினத்தில், அமர்வு வேளைக்குப் பின்னர், பூதவுடலை எடுத்து வந்து அஞ்சலி செலுத்த முடியும்.
எனினும் நாளையும் மறு தினமும் மாலை வரை விவாதம் நடைபெற வாய்ப்பு இருப்பதால், அச்சமயம் சம்பந்தனுக்கான அஞ்சலி நிகழ்வை அங்கு நடத்தக் கூடியதாக இருக்காது என்று கருதப்படுகிறது.
தமிழரசுக் கட்சியின் பிரமுகர் சுமந்திரன் எம்.பி. நேற்றிரவு சம்பந்தன் காலமான சமயம் யாழ்ப்பாணத்தில் நின்றார். விடயம் அறிந்ததும் அவர் கொழும்புக்கு விரைகின்றார். இன்று முற்பகல் அவர் சபாநாயகரை நேரில் சந்தித்து, நாடாளுமன்ற அஞ்சலி நிகழ்வு குறித்து முடிவெடுப்பார் என்று தெரிகின்றது.
அதற்கு முன்னர் கொழும்பு பொரளையில் ஏ.எவ்.றேமண்ட் மலர்ச்சாலையில் சம்பந்தனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனத் தெரிகின்றது.
அதன் பின்னர் திருகோணமலையில் அவரின் இறுதி நிகழ்வுகள் இடம் பெறவிருக்கின்றன.
திருகோணமலையில் இறுதி நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சம்பந்தன் ஐயாவின் குடும்பத்தவர்களுடன் இணைந்து கிழக்கு மாகாண ஆளுநரின் விசேட பிரதிநிதிகள் கொண்ட அணி கவனிக்கும் என்றும் தெரிகின்றது.
***
வெளிநாட்டுக் கடன் மீளளிப்புத் தொடர்பான மறுசீரமைப்புக் குறித்து அந்த நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று ஆரவாரமாக அறிவித்தது அரசு. அதனைப் பெரும் சாதனையாகவும் அது பிரகடனப்படுத்தியது.
அந்த ஒப்பந்தம் குறித்து நாளையும் மறு தினமும் நாடாளுமன்றத்தில் விசேட விவாதத்துக்கும் பிரதமரின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அந்த ஒப்பந்தத்தின் பிரதியை அரசு இன்னும் வெளியிடவில்லை. நாடாளுமன்றுக்கும் சமர்ப்பிக்கவில்லை. எதிர்க்கட்சியினருக்கும் அது கையளிக்கப்படவில்லை.
நாளைய விவாதத்துக்கு இன்றுதான் அதன் பிரதியை கையளிப்பார்களோ என்னவோ...?
அப்படி இறுதிவரை காட்டாமல் மறைத்து வைத்து, அதன் மீதான விவாதத்தை அவசர அவசரமாக நடத்தி, அதை அங்கீகரிக்க வைத்து, விடயத்தை விரைந்து முடிப்பதில் அரசு கரிசனையாக இருப்பதைப் பார்த்தால், இதற்கு பின்னால் ஏதும் சூத்திரம் பொதிந்து இருக்குமோ என்று பலதரப்புகளிலும் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் அங்கீகரித்து முடிந்த கையோடு, நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கும் சாத்தியமுண்டு என்று சில தரப்புகள் கருதுகின்றன.
பொறுத்திருந்து பார்ப்போம்...!