Saturday, October 10, 2026

சுற்றாடல் தின பணத்தை பயன்படுத்தப் பணிப்புரை


எதிர்வரும் ஜூன் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவிருந்த உலக சுற்றாடல் தினத்தின் தேசிய கொண்டாட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் என்று மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலக சுற்றாடல் தினத்தின் தேசிய விழாவை ஜூன் 05 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த விழாவை இரத்து செய்து, அந்த நிதி ஒதுக்கீட்டை மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆனாலும் உலக சுற்றாடல் தின தேசிய விழாவிற்காக நாடளாவிய ரீதியில் பத்து லட்சம் செடிகளை நடும் பணியை நாம் முன்னெடுக்கவுள்ளோம். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு செடியை நட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.  

you may also like