- by Editor
- 2 years ago
சு.க. அரசை அமைக்க நாங்கள் தயார்: விஜயதாஸ தெரிவிப்பு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் விஜயதாசஸ ராஜபக்ஷவை முன்னிறுத்தவுள்ளதாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்த நிலையில், சு.கவின் மே தினக் கூட்டத்தில் விஜயதாஸ ராஜபக்ஷ, கலந்துகொண்டு விசேட உரை நிகழ்த்தினார்.
இந்த உரையில் இலங்கையை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சி இரு பிரிவுகளாகப் பிளவுபட்டு அதிகாரப் போட்டியில் சிக்கியுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பால் மைத்திரிபால சிறிசேன தலைவராகச் செயற்பட முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை சு.கவின் பதில் தலைவராக மைத்திரியின் தரப்பு நியமித்தது.
மற்றைய தரப்பின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் கம்பஹா மாநகர சபை மைதானத்தில் மைத்திரியின் தரப்பு நேற்று மே தினக் கூட்டத்தை நடத்தியது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ,
"நாட்டை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். சுதந்திரக் கட்சி அரசை அமைக்கவும் நாங்கள் தயாராகவுள்ளோம்.
மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து 45 நாட்களிலேயே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட பாரிய அதிகாரங்களைக் குறைக்க நடவடிக்கை எடுத்தார்." - என்றார்.
மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில்,
"ஊழலை முடிவுக்குக் கொண்டு வருவதை இலக்காகக் கொண்ட கொள்கைகளை நாம் முன்வைக்கவுள்ளோம்.
வீடுகளில் இருப்பதைப் போலவே ஒட்டுமொத்த தேசத்திலும் ஒரு நெருக்கடி உள்ளது. இந்த நெருக்கடிகளைத் தீர்க்க ஊழல் இல்லாத அரசை நாம் உருவாக்க வேண்டும்.
தேசத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும், யாரைக் கைவிட வேண்டும் என்பதை மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர்." - என்றார்.