Thursday, October 8, 2026

இரகசியம் - பரகசியம் (03.10.2024)


'சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி...!' என்று வேதாளம் பற்றிய கதையை அம்புலி மாமா புத்தகத்தில் வாசித்த நினைப்பு உண்டு.

அதே மாதிரி, தமிழரசுக் கட்சியை மீண்டும் குழப்பியடித்து விழுத்தும் தன் கைங்கரியத்தை அதன் தலைவர் பதவியில் நீடிக்கும் மாவை சேனாதிராஜா தொடர்ந்தும் ஆரம்பித்திருக்கிறார் எனத் தெரிய வருகிறது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கு அண்மையில் நடந்து முடிந்த கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் 11 பேர் கொண்ட தேர்வு குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

அந்தக் குழுவுக்குக் கட்சியின் தலைவர் என்ற முறையில் தாம் மேலும் ஐந்து பேரை நியமிக்க முடியும் என்று கூறி அவர்களையும் தேர்வு குழுவில் சேர்த்துக் கொள்ளுமாறு கட்சியின் செயலாளர் சத்தியலிங்கத்துக்கு தொல்லை கொடுக்க தொடங்கி இருக்கிறார் மாவை சேனாதிராஜா என அறிய வருகிறது.

இப்படித்தான் கட்சியின் பொதுக்குழு கூட்டத்துக்கு தம் இஷ்டப்படி ஆள்களைச் சேர்த்து, நிலைமையைக் குழப்பி அடித்து, விவகாரத்தை நீதிமன்றம் வரை இழுத்துச் செல்ல வைத்தவர் மாவை சேனாதிராஜா. அப்படிப் பொதுக்குழுவுக்குத் தாம் ஆள்களைச் சேர்த்தமை தவறு என்று நீதிமன்றத்திலேயே ஒப்புக்கொண்டு, அவமானப்படும் நிலைக்கு அவர் சென்றிருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது அதே பாணியில், மத்திய குழு எடுத்த முடிவுக்கு மேலதிகமாக தேர்வு குழுவின் தலைவர் என்ற முறையில் தாமும் ஐந்து பேரைத் தேர்வுக் குழுவுக்குச் சேர்க்கலாம் என்று கதை விடப் புறப்பட்டிருக்கிறார் மாவையர்.

ஆனால் கட்சியின் செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கம் இம்முறை முகத்தில் அடித்தால் போல் மாவைக்குத் செமத்தியாக கொடுத்துவிட்டார் என அறிய வந்தது.

- ''கட்சியின் தீர்மானம் எடுக்கும் உயர்மட்ட கட்டமைப்பான மத்திய குழுவின் முடிவே கட்சியின் முடிவு. அதை நடைமுறைப் படுத்துவது செயலாளர் என்ற முறையில் - கட்சியின் நிர்வாகி என்ற வகையில் - எனது கடமை. தலைவர் சட்டவிரோதமாக எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது அல்ல'' - என்றும் மாவைக்கு செமையாக பதிலடி கொடுத்திருக்கிறார் மாவையர் என அறிய வந்தது.

தேர்வுக்குழுவே கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தில் போட்டியிட வேண்டிய வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் உள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி 'சுளையாக' விழுங்குவதற்காக இப்படி தேர்வு குழுவுக்கு கட்சியின் தலைவர் என்ற முறையில் ஆள்சேர்க்கும் அதிகாரம் தமக்கு இருப்பதாக கதை விடுகிறார் மாவையர். ஆனால் அவரின் இந்த அலப்பறைகளுக்கு இம்முறை இடமில்லை என்பதை கட்சியின் செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கம் கட்சித் தலைவருக்கு அவருக்கு உறைக்கத்தக்கதாக அறிவித்து விட்டார் என நம்பகரமாக தெரிய வந்தது.

***

சங்கு சின்னம் உத்தியாகபூர்வமாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு நேற்று கிடைத்துவிட்டது என்று அறிய வந்தது. அதன்படி ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி அதன் பழைய சின்னம் குத்துவிளக்குக்குப் பதிலாக இனிமேல் கூட்டணி சங்கு சின்னத்தைப் பயன்படுத்தும்.

***

கடந்த திங்கட்கிழமை மாலை இந்தியத் தூதுவரை அவரது இல்லத்தில் சந்தித்த பின்னர் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் கொழும்பில் உள்ள சித்தார்த்தனின் இல்லத்தில் ஒன்று கூடிப் பேசி இருக்கிறார்கள். இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் மாவை சேனாதிராஜா, செயலாளர் சத்தியலிங்கம், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோர் இந்தக் கூட்டத்தில் பங்கு பற்றியிருக்கின்றனர்.

பொதுவாக தமிழர் தேசமெங்கும் மீண்டும் பழைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போல் ஒன்றுபட்டு தேர்தலில் நிற்பது பற்றி அங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது. ஆயினும் அது சார்பான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. எனினும் அம்பாறையிலும் திருகோணமலையிலும் எதிரெதிர்த் தரப்பில் நின்று தமிழர் பக்கத்தின் வெற்றி வாய்ப்பைக் குழப்பாமல் எல்லா தமிழ் தரப்புகளும் ஒன்றுபட்டு அந்த இரு மாவட்டங்களிலும் ஒரே பட்டியலில் போட்டியிடுவது குறித்து பூர்வாங்க இணக்கம் அங்கு எட்டப்பட்டதாகத் தெரிகிறது. அதன்படி திருவோணமலையில் இலங்கை தமிழரசுப் பட்டியலிலும் அம்பாறையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பட்டியலிலும் போட்டியிடுவது பற்றி ஆராய்வது என தீர்மானிக்கப்பட்டதாக அறிய வந்தது.


you may also like