Sunday, October 4, 2026

இரகசியம் - பரகசியம் (11.06.2024)


நேற்று முன்னிரவு இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு இடையிலான பேச்சுக்கள் யாழ்ப்பாணத்தில் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தன.

''காத்திரமான - பயனுள்ள - கலந்துரையாடல்'' என்று கூட்டத்தின் பின்னர் புறப்படும் போது அக்கலந்துரையாடலில் சஜித் பிரேமதாஸவுடன் பங்கு பற்றிய இரான் விக்ரமரத்தின் எம்.பி. குறிப்பிட்டார்.

13 இன் நடைமுறையாக்கம் பற்றிப் பேசும்போது தமிழரசுத் தரப்பில் சி.வி.கே.சிவஞானம் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார்

''13ஆம் திருத்தமே தமிழர்களைத் திருத்திப்படுத்த போதுமானது அல்ல. ஆகவே அதற்கு இணங்குவது என்பது பெரிய விவகாரமும் அல்ல. ஆனால் 13 அவது திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னர் பல விடயங்கள் அதிலிருந்து பிடுங்கப்பட்டு விட்டன. அதிகாரங்கள் வெட்டிக் குறைக்கப்பட்டு விட்டன. அவற்றையெல்லாம் மீண்டும் கொண்டுவர வேண்டும்'' - என்று சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியவற்றை சஜித் கொள்கைளவில் ஏற்றுக் கொண்டார் என்று தெரிகிறது.

அதற்கு மேல் இரண்டு விடயங்களை சஜித் பிரேமதாஸ தானாகவே சுட்டிக்காட்டினார். அவை கவனிக்கத்தக்கவை.

ஒன்று - சட்டத்தின் மூலம் எதைத் தந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி தேவை. நிதி இல்லாமல் வெறும் சட்டப் புத்தகத்தில் மாத்திரம் அதிகாரத்தைப் பகிர்வது பயனற்றது. பிரதானமாக நிதி அதிகாரங்களின் பகிர்வு குறித்துத் தெளிவான சிந்தனை - பார்வை - எங்களுக்கு உண்டு. அதற்கான திட்டம் வைத்திருக்கிறோம். நாம் பதவிக்கு வந்ததும் அதனை செயல்படுத்துவோம். பகிரப்படும் அதிகாரங்களின் நடைமுறையாக்கத்துக்கு இந்த நிதி அதிகாரங்கள் பெரிதும் உதவும்.

அடுத்தது - என்ன அதிகாரத்தை சட்டத்தில் தந்தாலும், அதற்கான நிதியை ஒதுக்கினாலும், அத்தகைய பரவலாக்கிய அதிகாரங்களை சம்பந்தப்பட்ட அமைப்புகள் பிரயோகிப்பதற்கு உகந்த சூழ்நிலை அவசியம். அதாவது, மக்களின் மனநிலையில் அவற்றை அங்கீகரித்து உள்வாங்கும் மனநிலை ஏற்படுவது மிக முக்கியம்.

அதிகாரப் பகிர்வு பற்றிய கருத்து நிலைப்பாட்டை - அதன் நியாயத்தன்மையை - அதன் கட்டாயத்தை - மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்களையும் சமாந்தரமாக நாம் முன்னெடுக்க வேண்டும்.

அப்போதுதான் உருவாகும் இயல்பு நிலையும் புரிந்துணர்வும் நின்று, நிலைத்து, நீடிக்கும்.

- இப்படித் தமது எண்ணத்தை - திட்டத்தை - வெளிப்படுத்தி இருக்கின்றார் சஜித் பிரேமதாஸ.

எந்த சமரசம் முயற்சியையும், இணக்கத்தையும், புரிந்துணர்வையும், இனவாதத்தைக் கிளப்புவதன் மூலம் முறியடித்து விட முடியும் என்ற உடைந்து விடும் கள நிலைமையை சமாந்தரமாக மாற்றிக் கொண்டுதான் நல்லிணக்க நடவடிக்கையை நிலை நிறுத்த வேண்டும் என்று குட்டி லெக்சர் அடித்திருக்கின்றார் சஜித்.

காணி அதிகார பகிர்வு குறித்தும் அதையொட்டிய பிரச்சினைகளை விவரித்தும் மாவை சேனாதிராஜா கருத்து வெளியிட்டிருக்கிறார்.

அங்கு தெரிவித்த கருத்துக்கள், ஒப்புக்கொண்ட விடயங்களை உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன் வையுங்கள். வெளிப்படையாக - பகிரங்கமாக - தெரிவியுங்கள். அவற்றின் அடிப்படையில் நாம் நிலைமையைப் பரிசீலிப்போம் என்று சுமந்திரன் குறிப்பிட்டிருக்கிறார்.

நேற்றைய சந்திப்பில் சஜித் பிரேமதாஸ வெளிப்படுத்திய - பிரதிபலித்த - கருத்துக்கள் வரவேற்கத்தக்கவையாக இருந்தன. ஆனால் அதிகாரத்துக்கு வந்தால் இந்த நிலைப்பாட்டில்தான் அவர் தொடர்ந்தும் இருப்பாரா அல்லது வழமையான சிங்களத் தலைவர்கள் மாதிரி இனவாதப் பெரும் சமுத்திரத்துக்குள் அவரும் இறங்கி விடுவாரா? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்....!

இன்று தமிழரசுக்காரர்கள் ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸநாயக்கவுடன் பேசப்போகின்றனர்.

அவர் என்ன லெக்சர் வைக்கப் போகின்றாரோ தெரியவில்லை.

அவரின் லெக்சர் வடக்குக் கிழக்கை பிரித்த தங்களின் சாதனையில் இருந்து தொடங்கும் என்று நினைக்கிறேன்...!


you may also like