Thursday, October 8, 2026

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி - மேலதிக உர மானியம் வழங்க அரசு தீர்மானம்


சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிக உர மானியம் வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கான நிதி ஒதுக்கீடு ஏற்கனவே திறைசேரியால் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது உரத் தட்டுப்பாடு எதுவும் இல்லை என தெரிவித்த அமைச்சர், இருப்பினும் எதிர்காலத்தில் உரத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் எனவும் கூறினார்.

கப்பல் போக்குவரத்து மற்றும் காப்புறுதி கட்டணங்கள் அதிகரித்துள்ளதால் இறக்குமதி செய்யப்படும் உரத்தின் விலையும் உயர்ந்துள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

விவசாயிகளுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் நோக்கில், நெல் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 5,000 ரூபா மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது இரண்டு ஹெக்டேயர் வரை வழங்கப்படுவதால் 10,000 ரூபா வரை பெற முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேபோன்று, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கும் 5,000 ரூபா மேலதிக உர மானியம் வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

உர விநியோகம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், விலை உயர்வால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்காகவே இந்த மேலதிக மானியம் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

you may also like