- by Editor
- 8 months ago
இரகசியம் - பரகசியம் (23.04.2024)
எது நடக்கும் என்று நேற்று இப்பத்தியில் எதிர்வு கூறினேனோ அதுவே நடந்து விட்டது.
இலங்கைத் தமிழரசு கட்சியின் இன்று நடைபெறவிருந்த மத்திய குழுக் கூட்டம் நடைபெறாது என்பதை கட்சியின் பதில் பொதுச் செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கம் 'வருத்தத்தோடு' கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு அறிவித்துவிட்டார்.
சிறிதரன், சிறிநேசன், அரியநேத்திரன், யோகேஸ்வரன் போன்றோர் இன்று சித்ரா பௌர்ணமி என்பதால் இன்றைய கூட்டத்தில் பங்குபற்ற முடியாது என்று 'குறூப்'பாகத் தெரிவித்திருக்கும் நிலையில் கூட்டம் நடைபெறாமல் போகும் சாத்தியமிருப்பதாக நேற்றுக் கோடி காட்டியிருந்தேன். அதுவே நடந்து விட்டது.
ஆக, நாளை கட்சியின் வழக்குத் தவணைக்கு முன்னர் மத்திய குழு வழக்குக் குறித்து கூடி முடிவெடுத்து அறிவிக்கும் வாய்ப்பு இனி இல்லை.
இப்படி 'குறூப் அப்செண்ட்' திட்டம் மூலம் கூட்டத்தை நடக்காமல் செய்யும் நகர்வின் பின்னணி என்னவென்று தெரியவில்லை என நேற்றுக் குறிப்பிட்டிருந்தேன். சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் இருந்து தகவல்களை திரட்டியதில் இருந்து, பின்னணியைக் கோர்த்துக்கட்டி, ஓரளவு ஊகிக்க முடிந்திருக்கிறது.
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு குழம்பி, விவகாரம் வழக்குக்குள் போன பின்னர் கட்சியின் மத்திய குழு கூடவில்லை.
ஆக, கடந்த மார்ச் 17ஆம் திகதி வவுனியாவில் கட்சியின் அரசியல் குழு மட்டுமே கூடியது. அங்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே - அந்த வழிகாட்டுதல் படியேயே - தாம் எதிராளியாக வழக்கை முன்னெடுக்கின்றார் என்று வழக்கின் ஓர் எதிராளியான சுமந்திரன் நீதிமன்றத்தில் கடந்த தவணையின் போது தெரிவித்திருந்தார். அரசியல் குழுவின் வழிகாட்டலின் அடிப்படையில் தமது ஆட்சேபனைகளையும் நீதிமன்றத்தில் அவர் எழுத்தில் சமர்ப்பணம் செய்தும் விட்டார்.
அரசியல் குழுவின் முடிவின்படிதான் அவ்வளவும் தான் செய்கின்றார் என்ற சுமந்திரனின் நிலைப்பாட்டை மற்றைய எதிராளிகள் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தவில்லை. ஏற்றுப் போகும் நிலையையே அங்கு பிரதிபலித்துள்ளனர்.
இப்போது சிறிதரன், யோகேஸ்வரன் உட்பட்ட ஏனைய எதிராளிகள் தங்கள் ஆட்சேபனைகளை நாளை தாக்கல் செய்ய வேண்டும்.
சுமந்திரன் எடுத்துள்ள 'லைனில்' தாங்களும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்தால் சுமந்திரனின் நிலைப்பாட்டை ஏற்றதாகிவிடும்.
தப்பித் தவறி நாளை வழக்கு தவணைக்கு முன்னர் திட்டமிட்டபடி இன்றைய தினம் மத்திய குழு கூடி, ஏற்கனவே மார்ச் 17ஆம் திகதி அரசியல் குழு எடுத்த தீர்மானத்தை ஏற்று அங்கீகரித்து விட்டால் (கூட்டம் இன்று நடந்திருந்தால் பெரும்பாலும் அதுதான் நடந்திருக்கும் என்பது என் கணிப்பு), அதன் பின்னர் சுமந்திரன் வழியில் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் மற்றைய தரப்புக்கு ஏற்பட்டு விடும்.
இப்போது மத்திய குழு கூட்டம் நடக்கவில்லை. மத்திய குழு ஒரு முடிவையும் எடுக்கவில்லை.
'சுமந்திரன் கூறுவது அரசியல் குழுவின் வழிகாட்டல். அதை அவர் விரும்பினால் பின்பற்றலாம். ஆனால் கட்சியின் மத்திய குழுவே கட்சியின் கொள்கை நிலைப்பாட்டை எடுக்கக் கூடிய அதிகாரம் கொண்டது. அரசியல் குழுவின் முடிவு எங்களைக் கட்டுப்படுத்தாது. எதிராளிகளில் ஒருவர் அரசியல் குழுவிலேயே இல்லை. அரசியல் குழுவின் முடிவு கட்சியின் இறுதி முடிவு அல்ல. வழக்கின் எதிராளிகள் என்ற முறையில் நாங்கள் சுதந்திரமாக - சுயேச்சையாக - இப்போது எங்களது ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்திருக்கிறோம். காலக்கிரமத்தில் கட்சியின் மத்திய குழு கூடும்போது அது எங்கள் முடிவை அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' - என்று நீதிமன்றத்தில் தெரிவிக்க முடியும்.
இதன் மூலம் அரசியல் குழுத் தீர்மானங்களைக காட்டி சுமந்திரன் போட்ட பூட்டை உடைக்கவும், சுமந்திரனுக்கு மாற்றான நிலைப்பாட்டை கட்சியின் நிலைப்பாடு போல காட்டி நீதிமன்றத்தில் எடுக்கவும் மற்றைய எதிராளிகளுக்கு வழி பிறந்திருக்கின்றது எனக் கருதுகின்றது சுமந்திரனின் எதிரணி.
இதுதான் அவர்களின் நிலைப்பாடு என்பது நாளை நீதிமன்றத்தில் உறுதியானால், வழக்கு விடயத்திலிருந்து தமிழரசு இப்போதைக்கு வெளியில் வராது என்று அறுதியிட்டுக் கூறலாம் என்பதுதான் என் கணிப்பீடு.
கட்சியின் மத்திய குழுவைக் கூட்டி, காத்திரமாகப் பேசி, ஒரு தீர்மானத்தை எடுத்து, வழிநடத்த வேண்டியவர்கள், விடயங்களை கையாள முடியாமல் பேதமை நிலையில், முன்னுக்குப் பின் முரணாகத் தத்தளித்துப் பேசி, குழம்பிப் பேதலித்துக் கிடப்பதால் இப்படித்தான் கட்சி இழுபட்ட பக்கம் எல்லாம் எடுபட்டு, நொந்து நூலாவது தவிர்க்க முடியாததாக இருக்கும்.
வீடு முடங்கினால் மானில் பறக்கலாம் என்பதற்கான நகர்வுகளும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் உண்டு. அது குறித்து பிறிதொரு நாள் பார்ப்போம்.