Friday, October 9, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எம்பி அர்ச்சுனாவால் பதற்றம்


 கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எம்.பி. அர்ச்சுனா மற்றும் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அரசியல் பிரதிநிதிகள், அதிகாரிகள் மத்தியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், கைகலப்பாக மாறும் பதற்றமான சூழலும் உருவானது.

தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்த இந்தக் கூட்டத்தில், கூட்டத்தின் நோக்கம் மற்றும் விவாதங்கள் தொடர்பாக ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக பதற்றம் நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் காணொளியில், கூட்டத்தின் போது அரசியல் பிரதிநிதிகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதுடன், கைகலப்பை ஒத்த பரபரப்பான சூழலும் பதிவாகியுள்ளது.

இதன்போது கூட்டத்துக்கு தலைமை வகித்த அமைச்சர் சந்திரசேகரன், எம்.பி. அர்ச்சுனா அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று நிலைமையை விளக்க முயன்றதாக கூறப்படுகிறது. எனினும், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு தீவிரமடைந்த நிலையில், அமைச்சர் கடும் தொனியில் அர்ச்சுனாவை வெளியேறுமாறு தெரிவித்ததாகவும், மேசையில் இருந்த பொருளொன்றை கையில் எடுத்ததாகவும் காணொளியில் பதிவாகியுள்ளது

அதனைத் தொடர்ந்து, தனது ஆசனத்தில் இருந்து எழுந்த எம்.பி. அர்ச்சுனா, "என்னை யாரும் வெளியே செல்லுமாறு கூற முடியாது" என பதிலளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி தடுத்து நிறுத்திய நிலையில், அமைச்சர் தனது ஆசனத்திற்குத் திரும்பிச் சென்றார்.

இந்தச் சம்பவம் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அதன் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசுபொருளாக மாறியுள்ளது. சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

you may also like