Friday, October 9, 2026

கிரிக்கெட்டை முழுமையாக மாற்றியமைக்கப் போகும் புதிய சட்ட வரைவு


ஶ்ரீலங்கா கிரிக்கெட்டை மறுசீரமைப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட புதிய சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டு, பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டின் கட்டுப்பாடு, ஒழுங்குமுறைப்படுத்தல், மேம்பாடு, வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துவதையே இச்சட்டமூலம் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.

சட்டமூலத்தின் முக்கிய அம்சங்கள்:

நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மை: நல்லாட்சி, நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் சம வாய்ப்பளித்தல் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு: கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரதும் நலன்களைப் பாதுகாப்பதோடு, ஊழல் மற்றும் ஒழுங்கீனமான செயல்களிலிருந்து விளையாட்டைப் பாதுகாப்பதற்கான அதிகாரங்களும் பொறுப்புகளும் வரையறுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2026 ஜூன் 8 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இச்சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான முதற்கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட வரைவுக்குச் சட்டமா அதிபரின் அனுமதியும் பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்ற ஒப்புதலுக்குச் சமர்ப்பிப்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

you may also like