Friday, October 9, 2026

கிரகரி வாவி படகு சேவை தொடர்பில் விசேட அறிவித்தல்


நுவரெலியா கிரகரி வாவியின் சுற்றுலா படகு சேவையை முறைமைப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வனிகசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று (19) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, நுவரெலியா கிரகரி வாவியில் சுமார் 120 சுற்றுலா படகுகள் இயங்கி வருகின்றன.

விபத்துக்குப் பிறகு, படகு உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை அழைத்து பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டாயமாக உயிர்காக்கும் அங்கிகள் (Life Jackets) வழங்கப்பட வேண்டும் எனவும், வேகக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒழுங்குமுறைப்படி மற்றும் பாதுகாப்பாக படகு சேவைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில், இரு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு படகு, அதிவேகமாக வந்த மற்றொரு படகுடன் மோதியுள்ளது.

இதனால், சுற்றுலாப் பயணிகள் பயணித்த படகு கிரகரி வாவியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆனால், அருகில் இருந்த மற்ற படகு ஓட்டுநர்கள் உடனடியாக செயல்பட்டு, அந்த இரு சுற்றுலாப் பயணிகளையும் படகு ஓட்டுநரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இரு படகு ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

you may also like