- by Editor
- 2 months ago
இரகசியம் - பரகசியம் (27.08.2024)
பல்வேறு அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, அவற்றுடன் பயணிப்பது 'பேயுடன் குடும்பம் நடத்துவதற்கு' ஒப்பானது என்பது தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் தங்களுக்கும் சம பங்கு என்ற உரிமையுடன் போய் அமர்ந்து கொண்ட பத்தி எழுத்தாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் பொதுக் கட்டமைப்பின் நேற்றைய கூட்டத்துடன் ஓரளவுக்குத் தெளிவாகப் புரிந்து இருக்கும் என்று நம்பலாம்.
வடக்கு - கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்துக்கு சமஷ்டி தீர்வே ஒரே வழி என்று தமிழ் மக்களிடம் இந்தத் தேர்தல் மூலம் ஆணை கேட்போம் என்று புறப்பட்டவர்கள், அந்த ஆணைக் கோரிக்கையை கைவிட்டு, 'தமிழர் தேசமாக ஒன்று திரள்வோம்' என்று என்ற வேண்டுகோளை முன்நிறுத்தும் விதத்தில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை சுருக்கிக் கொள்ளும் கட்டாயம்.
தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு தமிழர்கள் மத்தியில் தனித்துவமான சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருக்காது.
சர்வஜன வாக்கெடுப்பு விடயமும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் தேசத்தின் கோரிக்கையாக முன்வைக்கப்பட வேண்டும் என்ற சிவாஜிலிங்கத்தின் வற்புறுத்தல் நேற்று மேற்படி பொதுக் கூட்டமைப்பு கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டு விட்டது என அறிய வந்தது.
மேற்படி இரண்டு விடயங்களையும் நிராகரிக்கச் செய்யும் வலியுறுத்தலில் ரெலோவும் ஜனநாயகப் போராளிகள் கட்சியும் மிக உறுதியாக நின்றன எனத் தெரிகின்றது.
பொதுக் கட்டமைப்பில் இணைவதற்கு 83 அமைப்புக்களின் பிரதிநிதிகள் தயாராக இருக்கிறார்கள் என்று ஆரம்பத்தில் கயிறு விட்ட பத்தி எழுத்தாளர்களிடம், எங்கே அந்த 83 அமைப்புகளின் பிரதிநிதிகள் என்று கேள்வி எழுப்பினார் கூட்டத்தில் பங்கு பற்றிய ஒரு கட்சியின் பிரமுகர்.
பத்தி எழுத்தாளர்கள் ஏதோ சமாளித்து, சாக்குப் போக்குச் சொல்லி, நேரடியாக பதில் கூறாமல், அசடு வழிந்தனர் என்று தகவல்.
நேற்றைய கூட்டத்தில் பொதுக் கட்டமைப்பின் பிரதிநிதிகள், தென்னிலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் அழைத்தால் ஒன்றாகப் போய் பேச வேண்டும் என்று மேற்படி ரெலோவும் ஜனநாயகப் போராளிகளும் வலியுறுத்தி நின்றனர்.
என்ன நிபந்தனையுடன் பேசப் போவது என்று ஒரு கட்சித் தலைவர் கேட்க, கொழும்பில் தூதரகத்தினர் அழைத்ததும் சாப்பாட்டுக்கும் சந்திப்புக்கும் நிபந்தனை விதித்தா பேச ஓடுகின்றீர்கள் என்று சீற்ற்த்துடன் கேட்டுச் சூடு கிளப்பினார் ஓர் எம்.பி.
தென்னிலங்கை வேட்பாளர்கள் பேச அழைத்தால் பொதுக் கட்டமைப்பாக பேசச் செல்வது தொடர்பில் சுரேஷ் பிரேமச்சந்திரனும் ஐங்கரநேசனும் கூறிய எதிர்க் கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டு, பேச்சு நடவடிக்கையில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி விடயம் குறித்தும் விரிவாக பேசப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கான நிதிக் கையாளுகையை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வங்கிக் கணக்கின் ஊடாக மேற்கொள்ளலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும், அக்கட்சியைத் தன் ஏற்பாட்டில் வைத்திருக்கும் புளொட் தலைவர் சித்தார்த்தன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. சுயேச்சை வேட்பாளரின் கணக்கு வழக்கை ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் வங்கி கணக்கு ஊடாக கையாள்வது வீண் பிரச்சனைகளைக் கொண்டு வரும் என்றார் சித்தார்த்தன்.
அதனை அடுத்து பொதுக் கட்டமைப்பு தெரிவு செய்த பொது வேட்பாளர் அரியநேத்திரனின் பெயரில் ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பித்து, அதனூடாக தேர்தல் தொடர்பான கொடுக்கல் - வாங்கல்களைக் கையாளலாம் என்று முடிவு செய்யப்பட்டது .
ஏற்கனவே பிரசாரத்துக்கு என 60 லட்சம் ரூபா நிதி கிடைத்திருப்பதாகவும், அதில் 5 லட்சம் ரூபா யாழ்ப்பாணத்தில் ஊடக அலுவலகத்தை வைத்து இயக்கும் வெளிநாட்டு பிரமுகர் தந்தது எனவும் கூறப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் நடக்கவிருந்த தேசிய மாநாட்டுக்கு உதவிய அதே ஊடக முதல்வர்தான் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரத்திற்காக முதல் கட்டமாக ஐந்து லட்சம் ரூபா வழங்கினார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சட்டப்படி இந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்கு ஒரு வாக்காளருக்கு ஆகக்கூடியது 109 ரூபா பணத்தையே வேட்பாளர் செலவழிக்க முடியும். அதன்படி இலங்கை வாக்காளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது ஒரு வேட்பாளர் ஆகக்கூடியது ஒரு கோடியே 80 லட்சம் ரூபாதான் பிரசாரத்துக்குச் செலவழிக்க முடியும்.
அதில் மூன்றில் ஒரு பங்கு - 60 லட்சம் ரூபா - பொதுக் கட்டமைப்பு வேட்பாளருக்கு இப்போதே வந்துவிட்டது. எஞ்சியதும் விரைவில் வந்து சேர - இடையில் பிய்ச்சல், பிறாண்டல், சுரண்டல் இல்லாமல் வந்து சேரப் பிரார்த்திப்போம்...!