Saturday, October 3, 2026

காங்கோவை உலுக்கும் எபோலா - 3,901 பேர் பலி


காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இதுவரை 8,067 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 3,901 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதத்தின் மத்தியில் காங்கோவில் எபோலா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அதன் பின்னர் பாதிப்பு தொடர்ந்து பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவான உயிரிழப்புகளின் அடிப்படையில், எபோலா பாதிப்புக்கான உயிரிழப்பு விகிதம் 48.4 சதவீதமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

7 மாகாணங்களில் பாதிப்பு

காங்கோவின் 7 மாகாணங்களில் உள்ள 63 சுகாதார மண்டலங்களில் எபோலா பாதிப்பு அதிகளவில் பதிவாகியுள்ளது. இந்தப் பகுதிகளில் பதிவான பாதிப்புகள், மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 76.4 சதவீதமாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எபோலா வைரஸ் மனித உடலில் கடுமையான நோய் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதுடன், உட்புற இரத்தப்போக்கு, உறுப்பு செயலிழப்பு மற்றும் உயிரிழப்புக்கும் வழிவகுக்கக்கூடும்.

அண்டை நாடுகளுக்கும் அச்சுறுத்தல்

காங்கோவின் அண்டை நாடுகளான உகாண்டா மற்றும் தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு சார்பில் உலகளாவிய சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரவலுக்கு பண்டிபக்யோ (Bundibugyo) வைரஸ் காரணமாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதற்கான சிகிச்சை மற்றும் தடுப்பு தொடர்பில் காங்கோவில் மருத்துவ ஆய்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

you may also like