- by Editor
- 2 years ago
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய குடித்ததில் 14 பேர் உயிரிழந்தனர்
-
- by Editor,
- 2 years ago
- in இந்திய செய்திகள்
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் அருந்திய நிலையல், நேற்று 14 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மாவட்ட எஸ்.பி. சமய்சிங் மீனா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மதுவிலக்குப் பிரிவு பொலிஸார் முழுமையாக மாற்றப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை அருந்தியவர்கள் இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, கள்ளச்சாராயம் அருந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் 19 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்ற வந்தவர்களில் மூவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 16 பேர் அங்கு தொடர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேபோன்று சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 7 பேரில் மூவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நால்வர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 2 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 32 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனிடையே, அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கோவிந்தராஜ் என்பவரை கைதுசெய்து, அவரிடமிருந்து 200 லிற்றர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். அதை விழுப்புரம் தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தியதில் மெத்தனால் வேதியியல் பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.