Thursday, October 8, 2026

கர்நாடக காங்கிரஸ் தமிழகத்தை எதிரி போல் பார்க்கிறது: அண்ணாமலை விமர்சனம்


கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தை எதிரி நாடு போல பார்க்கிறது. இதை அமைச்சர் துரைமுருகன் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பரமத்தி வேலூரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' நடைப்பயணம் மேற்கொண்டார். இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

காவிரி நதிநீர் பங்கீட்டில் காங்கிரஸும், தி.மு.கவும் அரசியல் நாடகம் நடத்துவதை போலத்தான், இண்டியா கூட்டணியும் உள்ளது. கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி தான் தமிழகத்தை எதிரி நாடு போல பார்க்கிறது என்பதை அமைச்சர் துரைமுருகன் உணர்ந்து கொள்ள வேண்டும்.

காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசுக்கு பா.ஜ.க. துணையாக இருக்கிறது எனக் கூறுவதில் உண்மையில்லை. பா.ஜ.க. ஆட்சி அங்கு நடக்கும்போதே அவர்களுக்கு எதிராக என் தலைமையில் உண்ணாவிரதம் நடத்தினோம். தமிழக பா.ஜ.கவை பொறுத்தவரை தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

மேலும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகளோடு சேர்ந்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். காவிரி நீர் பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலையோடுத்தான் செயல்படுகிறது. இந்த பிரச்னையில் யார், யாருக்கோ கடிதம் எழுதும் முதல்வர் மெளனம் சாதிப்பது எதற்கு எனத் தெரியவில்லை. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் அதை கர்நாடக அரசு நிறைவேற்றாமல் இருப்பதை, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கருதலாம் என்று தெரிவித்துள்ளார்.


you may also like