Friday, October 9, 2026

கதிர்காமம் ஆடிவேல் விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பம்


இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகத் திருத்தலமான கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் திருவிழா, இன்று (15) மாலை கொடியேற்ற நிகழ்வுடன் பக்தி பூர்வமாக ஆரம்பமானது.

மாலை 6.00 மணியளவில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வையொட்டி, திருவிழா கொடிக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், ஆலய வளாகத்திலுள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற பால்குடிபாவா பள்ளிவாசலைச் சுற்றி கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நான்கு முக்கிய சமயத் தலைவர்களின் ஆசியுரைகளுடன், பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் “அரோகரா” பக்தி முழக்கங்களுக்கு மத்தியில் புனிதக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.

இன, மத, மொழி வேறுபாடுகளைத் தாண்டி நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வில் பக்திப் பரவசத்துடன் கலந்துகொண்டனர்.

அத்துடன், நாட்டின் பல பகுதிகளிலிருந்து புனித பாதயாத்திரையை மேற்கொண்ட பக்தர்களில் முதலாவது குழுவினர் இன்று அதிகாலை கதிர்காமத்தை வந்தடைந்தனர்.

கடந்த 10ஆம் திகதி முதல் உகந்தை மற்றும் குமண தேசிய பூங்கா ஊடாக கதிர்காமம் வரையிலான காட்டுப்பாதை, பாதயாத்திரை பக்தர்களின் பயணத்திற்காக திறக்கப்பட்டிருந்தது.

திருவிழாவின் முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க திருவீதி உலா இன்று இரவு நடைபெறவுள்ளது.

தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ள இந்த ஆடிவேல் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தோற்சவம், எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை புனித மாணிக்க கங்கையில் நடைபெறவுள்ளது. அதனுடன் இந்த ஆண்டுக்கான கதிர்காமம் ஆடிவேல் திருவிழா நிறைவுபெறவுள்ளது.

you may also like