Saturday, October 10, 2026

ஒரு வாரத்தில் ரூ345 கோடி வசூல் ஈட்டிய ராம் சரணின் “பெத்தி


தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் நடிப்பில் கடந்த 4-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான ‘பெத்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபல இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், திவ்யேந்து மற்றும் ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விளையாட்டை மையமாகக் கொண்டு பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஜான்வி கபூர் தோற்றம் சர்ச்சை


படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஜான்வி கபூரை கவர்ச்சியாக காட்சிப்படுத்தியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த இயக்குநர் புச்சி பாபு சனா, பெண்களை அவமதிக்கும் நோக்கத்தில் எந்தக் காட்சியும் வைக்கப்படவில்லை என விளக்கம் அளித்ததுடன், யாரேனும் மனவருத்தம் அடைந்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்தார்.

வசூலில் புதிய சாதனை

இந்நிலையில், ‘பெத்தி’ திரைப்படம் வசூலிலும் தொடர்ந்து மிரட்டி வருகிறது. வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் இப்படம், 7 நாட்களில் உலகளவில் ரூ.345 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், விரைவில் ரூ.500 கோடி வசூல் மைல்கல்லை எட்டும் என்று திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. ராம் சரணின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக ‘பெத்தி’ அமையும் என்ற நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.

you may also like