Saturday, October 10, 2026

ஒக்டோபர் 1 முதல் புதிய VAT இன்வொய்ஸ் முறை கட்டாயம்


திருத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (VAT) இன்வொய்ஸ் படிவம் எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய VAT இன்வொய்ஸ் முறையை கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், வர்த்தகர்கள் மற்றும் வரி செலுத்துவோர் தங்களது கணக்கியல் மற்றும் மென்பொருள் அமைப்புகளைத் தயார்படுத்துவதற்கு மேலதிக கால அவகாசம் வழங்கும் நோக்கில் அமுலாக்கம் ஒத்திவைக்கப்பட்டது.

டிஜிட்டல் வரி வசூல் முறையை மேம்படுத்தவும், வரி வலையமைப்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் கடந்த மார்ச் 27ஆம் திகதி புதிய VAT இன்வொய்ஸ் வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்காக நிறுவன மட்டத்தில் மென்பொருள் மற்றும் பில்லிங் அமைப்புகளைப் புதுப்பிக்க வேண்டியுள்ளதாக வர்த்தக சமூகத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அந்தக் கோரிக்கைகளை பரிசீலித்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களம், ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் புதிய முறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான கணக்கியல் மற்றும் பில்லிங் அமைப்புகளை உரிய விவரக்குறிப்புகளுக்கு அமைவாக தயார்படுத்துமாறு வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

போலி இன்வொய்ஸ்களின் பயன்பாட்டைத் தடுப்பது, பரிவர்த்தனைகளை உடனுக்குடன் கண்காணிப்பது மற்றும் வரி கசிவைக் குறைப்பது ஆகியவையே புதிய VAT இன்வொய்ஸ் முறையின் முக்கிய நோக்கங்களாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

you may also like