Saturday, October 10, 2026

சென்னையில் குடியரசு தினம் நிகழ்வில் தேசியக் கொடி ஏற்றினார் ஆளுநர் ரவி









இந்தியா முழுவதும் 75 ஆவது குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது . இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஏற்றி வைத்தார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட, ஹெலிக்கொப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

முன்னதாக, முதல்வர் ஸ்டாலின், போக்குவரத்து பொலிஸ் படையினரின் வாகன அணிவகுப்புடனும், அவரை தொடர்ந்து ஆளுநர் ரவி, இராணுவ வாகன அணிவகுப்புடனும் விழா நடைபெறும் இடத்துக்கு வருகை தந்தனர். இதனைத் தொடர்ந்து தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, இராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, தமிழக பொலிஸ் துறையின் பல்வேறு பிரிவுகள், தேசிய மாணவர் படை, வனம், சிறை, தீயணைப்பு துறைகளின் படைப்பிரிவினர், பள்ளி, கல்லூரி பேண்டு வாத்திய குழுவினர், சாரண, சாரணியர், ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.

பின்னர், தமிழக கலை பண்பாட்டு துறை சார்பில் பல்வேறு மாநில கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், பாடசாலை, கல்லூரி மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து, முப்படைகளின் கவச வாகனங்கள், அரசுத் துறைகளின் திட்ட விளக்கங்கள் அடங்கிய 21 அணிவகுப்பு வாகனங்கள் வலம் வந்தன.

இதைத் தொடர்ந்து, மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, திருத்திய நெல் சாகுபடிக்கான விருதுகள், மதுவிலக்கு தொடர்பான காந்தியடிகள் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்துக்கான விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்த விழா நடைபெறும் பகுதியில் நேற்று 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. சென்னையில் பாதுகாப்பு பணியில் 7,500 பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.

you may also like