- by Editor
- 2 years ago
ஐ.நா. தீர்மானத்தை இந்தியா புறக்கணிப்பு: அவமானம் என்கிறார் பிரியங்கா காந்தி
-
- by Editor,
- 2 years ago
- in இந்திய செய்திகள்
மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக் கோரி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது.
இது அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்துகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ‘கண்ணுக்கு கண் என்பது உலகம் முழுவதையும் பார்வையற்றதாக்கிவிடும்’என்ற மகாத்மா காந்தியின் கருத்தை சுட்டிக்காட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவொன்றை பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில். காசாவில் போர் நிறுத்தம் தொர்பான வாக்கெடுப்பை நமது நாடு புறக்கணித்திருப்பது எனக்கு அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்துகிறது. எமது நாடு அகிம்சை மற்றும் உண்மை என்ற கொள்கையின் அடிப்படையில் உருவானது. அந்தக் கொள்கைகளுக்காக தான் விடுதலைப் போராட்ட வீரர்கள் தங்களின் இன்னுயிரைத் தந்தனர்.
அந்தக் கொள்கைகள் எமது தேசியத்தை வரையறுக்கும் அரசியலைமைப்பின் அடிப்படையை உருவாக்குகின்றன. அவை, சர்வதேச சமூகத்தை வழிநடத்தும் இந்தியாவின் வலிமையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
ஒரு நிலைப்பாடு எடுக்க மறுத்து, மனிதாபிமானத்தை உடைத்து லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துப் பொருள்கள், மின்சாரம் போன்றவைகள் மறுக்கப்படுவதையும், ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் கொல்லப்படுவதையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருப்பது, இந்தியா ஒரு தேசமாக நிற்பதற்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.