- by Editor
- 1 year ago
எம்மை எதிர்ப்பதற்கு லிமையற்ற பா.ஜ.க.. அ.தி.மு.கவை விலைக்கு வாங்கியிருக்கிறது
-
- by Editor,
- 6 months ago
- in இந்திய செய்திகள்
என்.டி.ஏ. கூட்டணியின் தலைமையாக இருக்கும் பா.ஜ.கவுக்கு, தமிழ்நாட்டில் நம்மை எதிர்ப்பதற்கு வலிமை இல்லை என்று அ.தி.மு.கவை விலைக்கு வாங்கியிருக்கிறது என்று திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான ஸ்டாலின் நேற்று திருவாரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திருவாரூர் - தெற்கு வீதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுகையில்,
“ என்.டி.ஏ. கூட்டணிக்கு ஒரே ஒரு நோக்கம்தான், தமிழ்நாட்டு வளர்ச்சியை தடுக்க வேண்டும். திராவிட மொடல் ஏற்படுத்தியிருக்கும் இந்த வளர்ச்சியை அழிக்க வேண்டும். இதுதான், என்.டி.ஏ. கூட்டணியின் நோக்கம். அந்த கூட்டணியின் தலைமையாக இருக்கும் பா.ஜ.கவிற்கு, தமிழ்நாட்டில் நம்மை எதிர்ப்பதற்கு வலிமை இல்லை என்று, அ.தி.மு.கவை விலைக்கு வாங்கியிருக்கிறது.
பொதுவாக, பா.ஜ.கவைப் பொறுத்தவரைக்கும் மக்களுக்கு நல்லது செய்யாது. ஆனால், தேர்தல் வந்துவிட்டது என்றால், கண்துடைப்பிற்காக பட்ஜெட்டில் சில அறிவிப்புகளைக் கொடுப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டிற்கு அதைக்கூட செய்ய மனமில்லாத, வஞ்சக எண்ணத்தோடு இருக்கும் உருவம்தான் என்.டி.ஏ.
பா.ஜ.க. ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்ததில்லை. எந்தச் சிறப்பு திட்டத்தையும் செய்யவில்லை; நாம் வைத்த எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. மதுரையில் ஒரு எய்ம்ஸ் அறிவித்தார்கள்; அதன் நிலைமையை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை.
சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி தரவில்லை. ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி கேட்டிருக்கிறோம்; தரவில்லை. குடிநீர் திட்டத்திற்கான நிதியும் தரவில்லை. இத்தனை தடைகளையும் சமாளித்துப் பல்வேறு சாதனைகளை நாம் செய்திருக்கிறோம். திறமையான நிர்வாகத்தால் ‘நம்பர் ஒன்’ மாநிலமாக உயர்ந்திருக்கிறோம்.
இருப்பதிலேயே என்ன கொடுமை என்றால்? இந்தித் திணிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று, நம்முடைய வீட்டுக் குழந்தைகள் படிப்பதற்கான கல்வி நிதியைக்கூட இதுவரைக்கும் கொடுக்கவில்லை. இப்படி வஞ்சக எண்ணம் கொண்ட கூட்டத்திடம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா? இப்படிப்பட்ட வஞ்சக கூட்டத்திடம் தமிழ்நாட்டு மக்களை ஒப்படைக்க முடியுமா?
என்.டி.ஏ. கூட்டணியை தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான், தமிழ்நாட்டின் எதிர்காலம் காப்பாற்றப்படும். என்.டி.ஏ. கூட்டணி என்பது, எப்படிப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணி என்று நீங்களே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். 'கரப்ஷன் - கொமிஷன் - கலக்ஷன்' என்று ஆட்சி நடத்திய பழனிசாமி அவர்களை மிரட்டி கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்து, வரிசையாக பல துரோகங்களைச் செய்து, பிரிந்த மாதிரி நாடகங்களை நடத்தி, கடைசியாக இப்போது, டெல்லியில் தீர்மானித்து, தோற்பதற்காகத் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது என்'டி'ஏ. இதுதான் உண்மை.
நீங்கள் அனைவரும் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும், நாம் போராடுவது, தி.மு.கவின் வெற்றிக்காக மட்டுமல்ல; தி.மு.க. தலைமையில் அமைந்திருக்கும் கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல; இது தமிழ்நாட்டின் வெற்றி! மறந்துவிடாதீர்கள். தமிழ்நாட்டுக்கான வெற்றி இது.
எனவே, அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த மண்ணின் மைந்தனாக கேட்கிறேன்... கருணாநிதியின் மகனாக கேட்கிறேன்... உங்களின் பொன்னான வாக்குகளை, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு நீங்கள் வழங்க வேண்டும்.
அமைய இருக்கும் திராவிட 'மொடல் 2.0' ஆட்சியில், எங்களின் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்சியை, தமிழ்நாட்டை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் ஆட்சியை, நாங்கள் வழங்குவோம். ஏப்ரல் 23 அன்று, நீங்கள் வாக்களிக்கச் செல்லும்போது நீங்கள் சிந்திக்க வேண்டியது, ஒன்றே ஒன்றுதான். என்.டி.ஏ. கூட்டணியின் தமிழர் விரோத சந்தர்ப்பவாத கூட்டணியா? தி.மு.க. சாதனைகளின் தொடர்ச்சியா? என்பதைச் சிந்தித்து வாக்களியுங்கள்.” என்று தெரிவித்தார்.