Friday, October 9, 2026

எரிபொருள் நெருக்கடி: ரஷ்யாவுடன் இலங்கை அவசர பேச்சு


மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வாக, ரஷ்யாவிலிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் ஆகியோருக்கிடையில் அவசர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் வெளிவிவகார அமைச்சில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையின் தேவையைப் பூர்த்தி செய்ய ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்வதில் காணப்பட்ட தடைகள் அண்மையில் நீக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இலங்கைக்குத் தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரஷ்ய தூதுவர், இது குறித்துத் தனது அரசுக்கு உடனடியாக அறிவிப்பதாகத் தெரிவித்தார். அத்துடன், தொடர்புடைய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக உறுதியளித்த அவர், இலங்கைக்குத் தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரஷ்யாவின் ஆதரவு தொடரும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இச்சந்திப்பில் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

you may also like