- by Editor
- 2 years ago
உயர்கல்வி ஆணைக்குழுவை அமைக்கும் பணி துரிதம்: சுரேன் ராகவன் தகவல்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
"பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பதிலாக தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அமைப்பதற்கான, முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான குழுவின் அவதானிப்புகள் அடங்கிய அறிக்கை அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான அறிக்கையை ஆராய்ந்த பின்னர் தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை இவ்வருடத்தில் நிறுவ முடியும்."
- இவ்வாறு உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
" 2021-2022 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, உயர்தரத்தில் சித்தி பெற்ற மாணவர்கள் 17 பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த வருடங்களில் திட்டமிட்டபடி மாணவரை இணைக்கும் பணி நடக்கவில்லை என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை உறுதிப்படுத்த உரிய ஆவணங்கள் என்னிடம் உள்ளன.
கடந்த காலத்தில் ஏற்பட்ட சில சிக்கல்களினால் சில பல்கலைகழகங்களின் இறுதியாண்டு மாணவர்கள் சரியான நேரத்தில் படிப்பை முடிக்க முடியாமல் இன்னும் பல்கலைகழகங்களில் தங்கி உள்ளனர். விரிவுரைகள் மற்றும் நடைமுறைக் கற்கைகளை நடத்துவதற்குத் தேவையான வகுப்பறை வசதிகள் இல்லாமல் இருக்கின்றன.
ஆனால், இந்த சிக்கல்களை தீர்க்க சில மாற்று வழிகளை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். இரத்மலானை பிரதேசத்தில் இருந்து மகாவலிக்கு சொந்தமான கட்டிடமும், களனி பிரதேசத்தில் இருந்து அரசாங்கத்திற்குச் சொந்தமான பல கட்டடங்களும் எமக்கு கிடைத்துள்ளன. இந்த கட்டடங்கள் புனரமைக்கப்பட்டவுடன் இந்தப் பிரச்னைகள் தீரும் என நம்புகிறோம். ” - என்றார்.