Thursday, October 8, 2026

ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் - ட்ரம்ப்


ஈரானுக்கு எதிரான இராணுவ மற்றும் பொருளாதார மோதலில் அமெரிக்கா வெற்றி பெறும் எனவும், ஈரான் சரணடைந்தவுடன் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை கடுமையாகக் குறையக்கூடும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் விரைவில் சரணடையும் எனக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அந்த நாடு சரணடைந்ததும் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும், இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை கணிசமாக வீழ்ச்சியடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

தனது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவில் வாழ்க்கைச் செலவு மற்றும் எரிபொருள் செலவுகள் குறைந்துள்ளதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வறுமை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போர்ச் சூழல் நிலவி வரும் நிலையிலும், கடந்த வார இறுதியில் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் இருந்து சாதனை அளவிலான கச்சா எண்ணெய் வெளியே கொண்டு வரப்பட்டதாகவும், இது போருக்கு முன்னர் காணப்பட்ட அளவை விட அதிகம் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இராணுவ நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு?

நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக ஈரானுக்கு எதிராக மேலும் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் ட்ரம்பின் கருத்துகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஈரான் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டால், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மட்டுமன்றி, மளிகைப் பொருட்களின் விலைகளும் கணிசமாகக் குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பதற்காக ஈரான் முன்வைத்ததாகக் கூறப்படும் அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த ஒப்பந்தம் அமெரிக்கா முன்வைத்த நிபந்தனைகளுக்கு அமைவாக இல்லாததால் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், அதேவேளை இரு தரப்புக்கும் இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

you may also like