- by Editor
- 2 months ago
இரகசியம் - பரகசியம் (28.3.2025)
-
- by Editor,
- 1 year ago
- in இரகசியம் பரகசியம்
உள்ளூராட்சித் தேர்தலில் பல கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்து பல பத்து வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பல தரப்புகளும் தாங்கள் தாக்கல் செய்த வழக்குகள் இன்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றன என்று தகவல் வெளியிட்டாலும், உண்மையில் இன்று உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்குகளில் ஒன்று மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
வவுனியா தெற்குத் தமிழ்ப் பிரதேச சபைக்கு ஜனநாயகத் தேசியக் கூட்டணியினால் (தபால் பெட்டிச் சின்னம்) கையளிக்கப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்து அக்கட்சியின் தேர்தல் முகவரும் கூட்டணிக் கட்சியான சிறி ரெலோவின் செயலாளருமான ப.உதயராஜா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவே இன்று நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
ஆயினும், ஏனைய பல மனுக்களும் இதே விடயத்திற்கான - தேர்தல் வேட்பு மனு நிராகரிப்புக்கு எதிரான - வழக்குகள் என்பதால் சிறி ரெலோ தரப்பின் வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்படும் போது, தாங்களும் நீதிமன்றில் ஆஜராகி, தங்கள் மனுக்களும் அதே விடயத்திற்கானதுதான் என்று குறிப்பிட்டு, அவற்றையும் மன்றில் எடுத்துக் கொள்ள வைக்க முடியும் என்று எதிர்பார்க்கின்றனர்.
அப்படி ஒரே விடயத்திற்கான மனுக்களை ஒன்றாகப் பரிசீலனைக்கு எடுப்பது உயர் நீதிமன்றத்தில் வழமை என்பதால், அதனை எதிர்பார்த்தே தங்கள் வழக்கும் இன்று பட்டியலிடப்பட்டுள்ளன என சில தரப்புகள் கூறுகின்றன. உண்மையில் சிறி ரெலோ தரப்பில் வழக்கு மட்டுமே இன்று இதுவரை நீதிமன்றில் எடுக்க பட்டியலிடப்பட்டுள்ளது. அது எடுக்கப்படும் போது, ஏனைய இதுபோன்ற வழக்குகளைச் சேர்ந்த மனுதாரர்களின் சட்டத்தரணிகளும் நீதிமன்றில் பிரசன்னமாகி தங்களின் மனுக்களையும் எடுத்துக் கொள்ளும்படி உயர்நீதிமன்றைக் கோருவார்கள் எனத் தெரிகின்றது.
இந்த மனுக்களை எப்படிக் கையாள போகின்றது என்பது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் பிரதிபலிப்பை இன்று எதிர்பார்க்கலாம்.
++++++++++++++++++++
பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருக்கும் தேசபந்து தென்னக்கோனை, நிரந்தரமாக அப்பபதவியில் இருந்து வெளியேற்றுவதற்கான பிரேரணை ஒன்று அரசு தரப்பினால் நாடாளுமன்ற சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. ஏப்ரல் 9, 10 ஆம் திகதிகளில் அது நாடாளுமன்றில் எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகின்றது.
அத்தகைய பிரேரணையொன்று எவ்வாறு கையாளப்படும் என்பது தொடர்பில் நேற்று 'மாலை முரசு' ஆசிரியர் தலையங்கத்தில் விடயம் விரிவாக விவரிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பில் கொழும்பிலிருந்து சட்டவாளர் ஒருவர் என்னுடன் பேசினார்.
''உங்கள் ஆசிரியர் தலையங்கத்தில் விளங்கப்படுத்திய மாதிரி 'அதிகாரிகளை பதவி நீக்கும் (நடைமுறைகள்) சட்டம்' என்று பெயரிடப்பட்ட 2002 ஆம் ஆண்டின் ஐந்தாம் இலக்கச் சட்டத்தின் மூலம் தென்னக்கோனை பதவி நீக்கம் செய்வதாயின் அது தொடர்பில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு விசாரணை நடத்தி, அந்த விசாரணையின் தீர்ப்பின் அடிப்படையிலேயே விடயத்தை முன்நகர்த்த முடியும். அப்படி விசாரணை நடத்தி விவகாரத்தை முன்னெடுப்பதாயின் நீண்ட காலம் பிடிக்கும்.'' - என்றால் அந்தச் சட்டவாளர்.
நான் சிரித்தேன்.
''ஆம். ஐயா!அது நாடாளுமன்றில் நீண்ட நடவடிக்கையாகத் தோன்றினாலும், ஆளும் தரப்பு நினைத்தால் அதைத் தன்னிடம் உள்ள பெரும்பான்மையை வைத்து சில மணி நேரங்களில் கூட பூர்த்தி செய்ய முடியும். பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்காவைப் பதவி விலக்குவதற்கு ஒரு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் விசாரணை 24 மணி நேரத்துக்குள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டமையை மறந்துவிடாதீர்கள். அப்படி நாடாளுமன்ற நடைமுறைகளை மோசமாக - கொச்சைத்தனமாக - பிற்போக்குத்தனமாக - முன்னெடுத்த அப்போதைய மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி பீடத்தை, இன்று அதிகாரத்தில் இருக்கும் ஜே.வி.பி. உட்பட்ட தேசிய மக்கள் சக்தி கடுமையாக எதிர்த்திருந்தது. ஆயினும் அதே தேசிய மக்கள் சக்தி மஹிந்த காலத்தின் அதே அராஜகப் போக்கை தேசபந்து தென்னக்கோன் விடயத்திலும் கையாள மாட்டாது என்று கூறுவதற்கு இல்லை. நினைத்தால் இரண்டு நாள்களுக்குளளும் விசாரணை முடிவுற்றதாக அறிவித்து, தேசபந்து தென்னக்கோனை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையை தேசிய மக்கள் சக்தி ஓரிரு வாரத்துக்குள் பூர்த்தி செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை'' - என்றேன்.
என் கருத்தைப் புரிந்து கொண்ட அந்தச் சட்டவாளர் ''இவங்களும் அப்படிச் செய்தாலும் செய்வார்கள்'' என்று கூறி தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.
அதிகாரம் கைக்கு வந்து விட்டால் எல்லா தரப்புக்களும் பெரும்பாலும் ஒரே மாதிரித்தான் நடக்கும் என்பது தவிர்க்க முடியாத நியதிதான்.