Friday, October 30, 2026

ஈரானுடன் நிதித் தொடர்பு - வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை


ஈரான் அல்லது அமெரிக்கத் தடைகளுக்கு உட்பட்டுள்ள அந்நாட்டின் நிதித் துறையுடன் தொடர்புகளைப் பேணும் வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு எதிராக முன்அறிவிப்பின்றி தடைகள் விதிக்கப்படலாம் என அமெரிக்க திறைசேரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அத்துடன், குறித்த நிறுவனங்களுக்கு எதிராக சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலின்படி, அமெரிக்கத் தடைகளை மீறும் வகையில் ஈரானுடன் நிதிப் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நிறுவனங்களின் அமெரிக்க டொலர் நிதி அமைப்புக்கான அணுகலை எந்த நேரத்திலும் இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஈரானுடன் மேற்கொள்ளப்படும் அனைத்து நிதித் தொடர்புகள் மற்றும் பரிவர்த்தனைகளையும் உடனடியாக இடைநிறுத்துமாறு வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை அமெரிக்க திறைசேரித் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்கத் தடைகளை மீறும் வகையில் ஈரானுடன் நிதி நடவடிக்கைகளில் ஈடுபடுவது வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு கடுமையான சட்ட மற்றும் நிதி விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

you may also like