Friday, October 9, 2026

ஈரானுக்குப் பிரதமர் மோடி கடும் கண்டனம் - ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 இந்தியர்களுக்குக் காயம்


ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் திடீர் தாக்குதலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் மூன்று இந்தியர்கள் காயமடைந்துள்ளதாகவும், பொதுமக்களை இலக்கு வைப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் சாடியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகம்வின் முக்கிய எண்ணெய் முனையமான புஜைரா பகுதியில், ஈரான் ராணுவம் ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலால் அந்த பகுதியில் உள்ள எண்ணெய் ஆலை தீப்பற்றி எரிந்ததாகவும், பணியில் இருந்த மூன்று இந்திய தொழிலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படை சில ஏவுகணைகளை இடைமறித்து அழித்திருந்தாலும், சில ஆளில்லா வானூர்திகள் இலக்கை தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொதுமக்களையும், அடிப்படை உள்கட்டமைப்புகளையும் இலக்கு வைப்பது முற்றிலும் நியாயமற்றது என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நீடித்த பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு அவசியம் எனவும், குறிப்பாக ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற கடல் போக்குவரத்தை உறுதி செய்வது முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

you may also like