- by Editor
- 3 weeks ago
இலங்கை வர அனுமதிக்கப்படாத சீன ஆய்வுக் கப்பல் மாலைதீவில்!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
இலங்கை கடலில் பிரத்தியேகமாக பொருளாதார வலயத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சீன ஆய்வுக் கப்பல் நேற்று மாலைதீவைச் சென்றடைந்தது.
இலங்கை வலய எல்லைக்குள் ஆய்வு அல்லது கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதன் பின்னரே சீன ஆய்வுக் கப்பல் மாலைதீவைச் சென்றடைந்தது.
இலங்கை நேரப்படி நேற்று மாலை 3.30 மணியளவில் சியாங் யாங் ஹொங் 3 கப்பல் மாலைதீவின் மாலே நகருக்கு அண்மையிலுள்ள கடலில் நங்கூரமிட்டுள்ளது.
இலங்கைக்கு அண்மையிலுள்ள பொருளாதார வலய எல்லையில் ஒரு மாத காலம் தங்கியிருந்து குறித்த கப்பல் மாலைதீவு நோக்கி நேற்றுப் பயணத்தை ஆரம்பித்தது.
இந்த நிலையில், மாலைதீவின் கடல் வலயத்தினுள் நேற்று அதிகாலை அக்கப்பல் பிரவேசித்துள்ளது.
சியாங் யாங் ஹொங் 3 சீன ஆய்வுக் கப்பலினால் இலங்கை தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையில் இடம்பெற்ற இராஜதந்திர கலந்துரையாடலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக சீன ஆய்வுக் கப்பல், இலங்கைக் கடற்பரப்பிற்குள் வருகை தருவது தமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என இந்தியா, இலங்கை மீது அழுத்தம் விடுத்ததுடன், சீன கப்பல் இரட்டை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டது.
இவர்கள் சேகரிக்கும் தரவுகள் நீர்மூழ்கிக் கப்பல்களை செயற்படுத்தல் உள்ளிட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் இந்தியா குற்றஞ்சாட்டியது.
இந்த பின்புலத்திலேயே அனைத்து நாடுகளின் ஆய்வுக் கப்பல்களும் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தடை விதித்திருந்தது.
எனினும், இலங்கை குறித்த தடையை விதிக்கும் போதும், சீன அரசாங்கம் சியாங் யாங் ஹொங் 3 என்ற ஆய்வுக் கப்பலை இலங்கை கடற்பரப்பில் ஆய்வு நடவடிக்கைகளுக்காக அனுப்ப எழுத்து மூலம் அனுமதி கோரியிருந்தது.
இதற்கு கப்பல் தயாராக இருந்த நிலையிலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டது.
இதனடிப்படையில், சீனாவில் இலிருந்து கடந்த மாதம் 16ஆம் திகதி இந்து சமுத்திரத்தை நோக்கி புறப்பட்ட சீன கப்பல், இலங்கைக்கு பதிலாக மாலைதீவைத் தனது பயண இலக்காகத் தெரிவு செய்திருந்தது.
கடந்த 8 ஆம் திகதி மாலைதீவைச் சென்றடைவதாக அறிவித்திருந்த போதிலும், அவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடல் எல்லைக்கு அண்மித்த பகுதியில் ஆய்வு அல்லது கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இலங்கையின் தெற்கு கடற்கரையிலிருந்து 200 கடல் மைல் தொலைவில் உள்ள பகுதி இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயம் என்பதுடன், சியாங் யாங் ஹொங் 3
அந்த எல்லையைச் சுற்றிச்சென்று ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டது.
இலங்கை, சீன கப்பலுக்கு அனுமதி மறுத்த நிலையில், கடந்த 3 ஆம் திகதி இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பை வந்தடைந்தமையுடன் கடற்படை மரியாதையின் மத்தியில் வரவேற்கப்பட்டமை இந்தியாவின் வெற்றி என இந்திய ஊடகம் தெரிவித்திருந்தது.
இலங்கை மீதான இந்தியாவின் அழுத்தம் வெற்றியல்ல, இந்தியாவுக்கு வெட்கக்கேடானது என்று சீன ஊடகம் இதற்குப் பதிலளித்துள்ளது.
இதனிடையே, சியாங் யாங் ஹொங் 3கப்பல் தமது கடல் எல்லையில் எவ்வித ஆய்வுகளிலும் ஈடுபடவில்லை என்பதுடன், விநியோக நடவடிக்கைக்காக வருகை தந்துள்ளதாக மாலைதீவு அறிவித்துள்ளது.