Tuesday, October 6, 2026

இலங்கையில் 'டித்வா' புயலால் 2.75 லட்சம் சிறுவர்கள் பாதிப்பு


'டித்வா' சூறாவளியின் பேரழிவால் இலங்கையில் பாதிக்கப்பட்ட 14 லட்சம் பேரில், 275,000 இற்கும் அதிகமான சிறுவர்கள் அடங்குவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.

தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்துத் தடைகள் காரணமாக உண்மையான பாதிப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் அந்த நிதியம் கவலை வெளியிட்டுள்ளது.

கடந்த நவம்பர் 28 ஆம் திகதி கரையைக் கடந்த இந்த சூறாவளி ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக, வீடுகள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

இந்த சேததத்தினால் அத்தியாவசியச் சேவைகளின் இடையூறு மற்றும் பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சியான தாக்கம் என்பன சிறுவர்களிடையே நோய்த்தொற்று அபாயம், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் கடுமையான உள நெருக்கடி போன்ற அபாயங்களை அதிகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி எம்மா பிரிகாம் கூறுகையில்,

"சிறுவர்களுக்கு அவசரமாக உதவி தேவைப்படுகிறது. உயிர் காக்கும் சேவைகள் தேவைப்படும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களைச் சென்றடைவது ஒரு காலக்கெடுவுக்கு எதிரான போட்டியாக உள்ளது." என்று வலியுறுத்தினார்.

எனவே, சுத்தமான குடிநீர், அத்தியாவசிய ஊட்டச்சத்துப் பொருள்கள், உள சமூக ஆதரவு மற்றும் அவசரக் கல்வி உபகரணங்களை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தனது முயற்சிகளை அதிகரித்துள்ளதுடன், மேலதிக நிதிக்காக சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளாதிருக்கும் இலங்கையின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் போராட்டத்தை இந்தச் சூறாவளி மேலும் ஆழமாக்கியுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வறுமை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக (11.3 வீதத்திலிருந்து 24.5 வீதமாக ) அதிகரித்துள்ளது என்று உலக வங்கியின் 2025 ஆம் ஆண்டு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை தொடர்கிறது எனவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் குறிப்பிட்டுள்ளது.  

you may also like