- by Editor
- 2 years ago
இலங்கையில் இரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி : Ne-Yo மீது அமெரிக்காவில் வழக்கு!
-
- by Editor,
- 3 weeks ago
- in சினிமா செய்திகள்
இலங்கையின் கொழும்பில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த தனது இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, அமெரிக்க R&B இசைக்கலைஞர் Ne-Yo (நீ-யோ) மீது இலங்கையைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான Brown Boy Presents நிறுவனம் அமெரிக்காவில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
நிகழ்ச்சிக்காக முன்பணமாக செலுத்திய 284,000 அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை மீளப் பெற்றுத் தருமாறு கோரியுள்ளதாக ‘Billboard’ செய்தி வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 4ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் Ne-Yo, அவரது நிறுவனமான Compound Touring மற்றும் முன்பதிவு முகமை நிறுவனமான Independent Artist Group (IAG) ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். ஒப்பந்த மீறல் உள்ளிட்ட பல்வேறு சிவில் குற்றச்சாட்டுகளும் வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ளன.
‘Billboard’ தகவலின்படி, 2025 டிசம்பர் 28ஆம் திகதி கொழும்பு சுகததாச மைதானத்தில் இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக Brown Boy Presents நிறுவனம் Ne-Yo உடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இதன்படி, Ne-Yo-வுக்கு 325,000 அமெரிக்க டொலர் நிர்ணயிக்கப்பட்ட ஊதியமாகவும், டிக்கெட் விற்பனையை அடிப்படையாகக் கொண்ட மேலதிக போனஸ், பயணம் மற்றும் தங்குமிட வசதிகளும் வழங்கப்பட வேண்டியிருந்தன.
நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதற்கு முன்னர், ஒப்பந்த ஊதியத்தில் குறைந்தது 284,460 அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டதாக Brown Boy Presents தெரிவித்துள்ளது.
எனினும், டிசம்பர் மாதத் தொடக்கத்தில் Ne-Yo நிகழ்ச்சியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, திட்டமிடப்பட்ட இசை நிகழ்ச்சி நடைபெறவில்லை.
இதனிடையே, ஒப்பந்தப்படி செலுத்த வேண்டிய தொகையை Brown Boy Presents முழுமையாக செலுத்தவில்லை என்றும், Ne-Yo மற்றும் அவரது குழுவினருக்கான பயணம் மற்றும் தங்குமிட ஏற்பாடுகளை ஒப்பந்தப்படி செய்யத் தவறியதாகவும் பாடகரின் தரப்பு முன்னதாக குற்றம்சாட்டியிருந்தது.
மறுபுறம், ஒப்பந்தத்தை மீறியதற்கு Ne-Yo மற்றும் அவரது பிரதிநிதிகளே காரணம் என Brown Boy Presents தனது வழக்கில் குற்றம் சாட்டியுள்ளது.
சுமார் 30 பேர் கொண்ட Ne-Yo-வின் குழுவினருக்கான அதிக செலவிலான பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அவரது தரப்பு வலியுறுத்தியதாகவும், இதனால் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் தங்களுக்கு சிக்கல் ஏற்பட்டதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, விமானப் பயணச் செலவு மட்டும் சுமார் 93,000 அமெரிக்க டொலர் வரை சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த நவம்பர் மாத இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக உள்ளூர் டிக்கெட் விற்பனை மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், Ne-Yo தரப்பிற்கு ஏற்கனவே செலுத்திய 284,000 அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை மீளப் பெறுவதுடன், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட மேலதிக இழப்புகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என Brown Boy Presents கோரியுள்ளது.
டிக்கெட் பணத்தைத் திரும்பச் செலுத்துவதற்கான கட்டணங்கள், விளம்பர நடவடிக்கைகளில் ஏற்பட்ட இழப்புகள், நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடம் மற்றும் தயாரிப்பு தொடர்பான செலவுகள் உள்ளிட்ட பல்வேறு இழப்புகளும் இதில் அடங்குவதாக ‘Billboard’ தெரிவித்துள்ளது.
Ne-Yo தரப்பு குற்றச்சாட்டுகளை நிராகரிப்பு
இதனிடையே, Brown Boy Presents முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை Ne-Yo தரப்பு வன்மையாக நிராகரித்துள்ளது.
Ne-Yo-வின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் ‘Billboard’ ஊடகத்திடம், இந்தக் கோரிக்கைகள் முற்றிலும் தவறானவை மற்றும் தவறாக வழிநடத்துபவை என தெரிவித்துள்ளார்.
மேலும், நிகழ்ச்சிக்கு முன்னதாக Ne-Yo-வுக்கான முழுமையான கட்டணத்தையும், பாடகர் மற்றும் அவரது குழுவினருக்கான இருவழிப் பயணச் செலவுகளையும் ஏற்பாட்டாளர் ஏற்க ஒப்பந்தப்படி கடமைப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்ற Brown Boy Presents நிறுவனத்திற்கு பல சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்ட போதிலும், அவற்றை நிறைவேற்றத் தவறியதாகவும் Ne-Yo தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதி ஆதாரம் இல்லை என்பது தெளிவானதால், நிகழ்ச்சியிலிருந்து விலகுவதைத் தவிர Ne-Yo-வுக்கு வேறு வழியில்லை என்றும் அவரது பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
Brown Boy Presents மற்றும் தொடர்புடைய பிற தரப்பினருக்கு எதிராக இதேபோன்ற குற்றச்சாட்டுகள் இருப்பது குறித்தும் பின்னர் தங்கள் தரப்பு அறிந்துகொண்டதாக Ne-Yo-வின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக Independent Artist Group (IAG) கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக ‘Billboard’ குறிப்பிட்டுள்ளது.