Friday, October 9, 2026

இலங்கைத் தொடரிலிருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகல்


இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இருபது20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பின்னர் ஏற்பட்ட இடது முழங்கால் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய கூடுதல் காலம் தேவைப்படுவதால், அவர் இந்தத் தொடரில் பங்கேற்காத முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பும்ரா மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவதில் அவசரம் காட்ட வேண்டாம் என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவருக்குப் பதிலாக இலங்கைத் தொடருக்கான இந்திய அணியில் எந்த வீரர் சேர்க்கப்படுவார் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு ஜஸ்பிரித் பும்ரா எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து தொடருக்குப் பிறகு, பும்ராவின் நீண்டகால உடற்தகுதியை கருத்தில் கொண்டு BCCI மருத்துவக் குழு வகுத்த சிகிச்சைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அவரது காயத்திற்காக ஊசி சிகிச்சையும் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா – இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 15ஆம் தேதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 23ஆம் திகதி கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தத் தொடருக்கு முன்னதாக, இந்திய அணி ஓகஸ்ட் 7ஆம் திகதி முதல் கொழும்பில் நடைபெறும் மூன்று நாள் பயிற்சிப் போட்டியில் பங்கேற்கவுள்ளது.

you may also like