Saturday, October 10, 2026

இரு விவாதங்களுக்கும் இந்த மாதம் நாம் தயார்: தேசிய மக்கள் சக்திக்குச் சஜித் சவால்


"பொருளாதாரக் குழுக்களுக்கிடையிலான விவாதத்தை நடத்த தேசிய மக்கள் சக்தி தயங்குவது போல் தெரிகின்றது. ஆனால், ஐக்கிய மக்கள் சக்தி குழுவாக இரண்டு விவாதங்களுக்கும் தயாராக உள்ளது. இந்த இரண்டு விவாதங்களுக்கும் இந்த மே மாதத்திலேயே திகதிகளை ஒதுக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்."

- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 170 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் கம்பஹா, மீரிகம, கல்எலிய அலிகார் தேசிய பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான உண்மையான மற்றும் யதார்த்தமான தரவுகளை மையமாகக் கொண்ட பொருளாதாரப் பார்வை மற்றும் திட்டத்தைக் கொண்ட குழு ஐக்கிய மக்கள் சக்தியிடமே உள்ளது. வாய்ப் பேச்சு மட்டுமுள்ள தலைவரிடம் வாய்ப்பேச்சு மட்டுமே உள்ள குழுவும், ஐக்கிய மக்கள் சக்தியிடம் சொன்னதைச் செய்யும், செய்வதைச் சொல்லும் குழுவும் இருப்பதால், இந்த இரண்டு விவாதங்களும் இந்த மே மாதம் நடத்தப்பட வேண்டும். அதுமட்டுமல்லாது, நாட்டுக்காகப் பணியாற்ற முன்வருமாறும் தேசிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுகின்றோம்.

இன்று சர்வதேச ஊடகவியலாளர் தினம். நாம் ஊடக சுதந்திரத்துக்காக முன்நிற்க வேண்டும். ஊடக சுதந்திரம் இருக்கும் ஒரு நாட்டில் மக்களுக்கு ஜனநாயக உரிமைகளும், தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமையும் ஊடக சுதந்திரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஊடக சுதந்திரத்துக்காக நிபந்தனையின்றி முன்நிற்கின்றோம்.

ஊடக சுதந்திரத்தில், மக்களுக்கு உண்மைத் தகவல்களைத் தெரிவிப்பதும், ஆதாரத்துடன் தகவல்களை முன்வைப்பதும் பொறுப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும். மக்களின் மனச்சாட்சியை நன்கு அறிந்த, படித்த, புத்திசாலித்தனமான ஊடகத்துறையினர், நாட்டுக்கு உண்மைத் தகவல்களை, உண்மை நிலையைத் தெரிவிக்கும் கடமையை நிறைவேற்றுவார்கள் என நம்பப்படுகின்றது. இந்த ஊடக சுதந்திரத்துக்கு ஒருபோதும் பாதிப்பு ஏற்படக்கூடாது.

மே தினம் காரணமாக பிரபஞ்சம் வேலைத்திட்டங்களுக்குச் சிறிது இடைவெளி எடுக்க வேண்டி ஏற்பட்டாலும், நாம் இந்தப் பணிகளை மீண்டும் ஆரம்பித்துவிட்டோம். எந்தவொரு எதிர்க்கட்சித் தலைவரும் இவ்வாறான சேவையைச் செய்ததில்லை." - என்றார். 

you may also like